கடத்தியது யார்?
‘கொளுத்தியது யார்? ஸ்டெர்லைட் மறைக்கப்பட்ட உண்மைகள்’
என்ற தலைப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு தென் மண்டல காவல்துறை ஐ.ஜி சைலேஷ்குமார் யாதவ் மற்றும் டி.ஐ.ஜி கபில் குமார் சரத்கர்தான் காரணம் என்றும்... ஸ்டெர்லைட் நிறுவனத்தின் அடியாட்கள் உதவியுடன்தான் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரங்கேற்றியிருக்கின்றனர் என்றும்...
அதற்கான வீடியோ ஆவணங்களைக் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் சூழலியல் போராளியுமான முகிலன் வெளியிட்டு அதிரடித்தார்.
அப்போதே, "இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார்.
அவர் கூறியது போலவே முகிலனைக் காணவில்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பிப்ரவரி 15-ம் தேதி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலமாக மதுரைக்குக் கிளம்பிய முகிலன், வழியிலேயே மாயமாகியிருக்கிறார்.
சென்னையிலிருந்து கிளம்புவதற்கு முன்பு முகிலனை, அவருடைய நண்பர்கள் எழும்பூர் ரயில் நிலையத்தில் வைத்துச் சந்தித்திருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், மதுரையிலிருக்கும் நண்பர் ஒருவரிடம் இரவு பத்தரை மணியளவில் பேசிய முகிலன், ‘காலை 11 மணிக்குள் மதுரை வந்துவிடுவேன்’ எனப் போனில் பேசியிருக்கிறார்.
சமூகவலைதளங்களில் நள்ளிரவு வரை அவர் ஆன்லைனில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், நள்ளிரவுக்குப் பின்னர் முகிலனின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருக்கிறது. மதுரைக்கு வருவதாகச் சொன்ன முகிலன் மாயமாகியிருக்கிறார்.
ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான வீடியோ ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்போவதாக முகிலன் சொல்லியிருந்த நிலையில் மாயமாகியிருப்பது, அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
இதையடுத்து முகிலனுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் காவல்துறையில் புகார் அளித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்திருக்கின்றனர்.
பிப்ரவரி 22-ம் தேதி முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டுமென நீதிமன்றமும் உத்தரவிட்டிருக்கிறது.
முகிலன் திடீரென மாயமானது தொடர்பாக அவர் பூங்கொடிகூறியது :
``பிப்ரவரி 13-ம் தேதி திருநெல்வேலியிலிருந்து ராத்திரி 8.30 மணிக்கு வீட்டுக்கு வந்தார்.
வந்த ஒரு மணி நேரத்துலயே, ‘சென்னையில ஒரு பிரஸ் மீட் இருக்கு’ன்னு சொல்லிட்டுக் கிளம்பிட்டார். நாங்க போன்ல அடிக்கடி பேசிக்க மாட்டோம். அப்படியிருக்க, அவரோட நண்பர்கள் இந்த மாசம் 16-ம் தேதி போன் செஞ்சு, ‘முகிலன் மதுரைக்கு வர்றேன்னு சொன்னாரு.
இன்னும் இங்க வரலை. வீட்டுக்கு ஏதாவது வந்தாரா!’ன்னு கேட்டாங்க.
அப்பவே போலீஸ்தான் ஏதோ வேலை பண்ணியிருக்குன்னு எனக்குத் தெரிஞ்சிடுச்சு.
கிட்டத்தட்ட நாலு நாளா அவர் எங்க இருக்காருன்னே தெரியலை. அரசாங்கமும் ஸ்டெர்லைட் நிறுவனமும்தான் என் வீட்டுக்காரரை எங்கேயோ வச்சிருக்காங்க. ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு பல பேர் கைக்கூலிகளா இருக்காங்க.
ஒருநாளைக்கு 1,500 கோடி வரை சம்பாதிக்குற அந்த நிறுவனம் யாரை வேணும்னா விலைக்கு வாங்கும். ஒருவேளை ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் பட்சத்தில், என் வீட்டுக்காரர் ஏதாவது பிரச்சினையில் இறங்குவார், அரசுக்குத் தேவையில்லாத நெருக்கடி வரும்னு நினைச்சுகூட முன்கூட்டியே அவரைக் கடத்தியிருக்கலாம்.
இப்படி அவரைக் கொண்டுபோய் ரகசிய இடத்துல வைக்கிறது, இது முதல் தடவை இல்லை.
இதுக்கு முன்னாடியும் இதே மாதிரி ரெண்டு தடவை செஞ்சிருக்காங்க. ரெண்டு மூணு நாள் மறைமுகமா வச்சிருந்து, அதுக்கப்புறமாகத்தான் கோர்ட்ல அவரைக் கொண்டு வந்து நிறுத்தினாங்க.
தொடர்ந்து அரசாங்கம் இப்படித்தான் பண்ணிக்கிட்டு இருக்கு. இந்த மாதிரியான அச்சுறுத்தல்களால் எல்லாம் என் வீட்டுக்காரருடைய செயல்பாடுகளை இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்திட முடியாது. அரசாங்கத்துக்கு மடியில கனம் இல்லைன்னா, என் வீட்டுக்காரரைக் கைது செஞ்சு நேரடியாகவே சிறையில் அடைச்சிருக்கலாமே..!.
இந்த மாதிரியான பிரச்னைகளைக் கண்டு ஒருநாளும் ‘இதுவேணாம் விட்ருங்கன்னு’ நான் என் வீட்டுக்காரரிடம் சொன்னதே இல்லை.
ஏற்கெனவே நம்ம சமூகத்துல மக்கள் பிரச்னைக்காகப் போராடுறவங்க விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருக்காங்க.
நாமளும், எதுக்குத் தேவையில்லாத பிரச்னைன்னு இருந்துட்டா,
அப்புறம் சமூகத்துல நடக்குற தப்பான விஷயங்களை யார்தான் சுட்டிக்
காட்டுறது... அந்த வகையில், எவ்வளவு இடைஞ்சல்கள் எங்களுக்கு வந்தாலும் என்
வீட்டுக்காரருக்கு நாங்க துணையாக இருப்போம்.
என் வீட்டுக்காரர் முழுமையான ஆதாரங்கள் இல்லாம எந்த ஒரு பிரச்னையையும் கையில எடுக்க மாட்டார்.
சின்ன நிறுவனம் பெரிய நிறுவனம்னு இல்லை.
யாரா இருந்தாலும் அவங்களோட தப்பை வெட்ட வெளிச்சமாக்குவார். அதனால்தான் அரசாங்கம் எங்க வீட்டுக்காரரைக் கண்டு பயப்படுது.
என் வீட்டுக்காரர் கல்யாணத்துக்கு முன்னாடியே, ‘எனக்கு பொது வாழ்க்கை முக்கியம். அதுல எனக்கு உயிர் போனாலும் போகலாம்.
நீதான் வீட்டைப் பாத்துக்கணும்’ன்னு சொல்லிதான் என்னைக் கல்யாணம் செஞ்சார்.
தனிப்பட்ட சந்தோஷத்துக்காக அவர் எதையும் செய்யுறதில்லை.
இப்பக்கூட அவரை போலீஸ்தான் மறைமுகமாக எங்கயோ வச்சிருக்காங்கன்னு உறுதியா நினைக்கிறேன் .
ஒருவேளை இப்ப அவரு உயிரோட இல்லாமக்கூட இருக்கலாம்.
அதை எப்படி நான் எதிர்கொள்வது என்ற பக்குவத்தையும், தைரியத்தையும் எனக்கு அவர் கொடுத்திருக்கார்.
மக்களுக்காகப் போராடுகிறவகையில் பெரும் பணம் படைத்தவர்கள்,அதிகாரவர்க்கத்தினர் அவரை எதிரியாகப்பார்க்கலாம்.
ஆனால் அவருக்குத் தனிப்பட்ட முறையில் பிரச்னைகளோ, எதிரிகளோ இல்லை.
தற்போது ஸ்டெர்லைட் விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அதிமுக அரசாங்கம், பணம் வாங்கிக்கொண்டு கூலிப்படையை விட கீழ்த்தரமாக செயல்படும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தைத் தவிர அவர் மீது வேறு யாரும் கை வைத்திருக்க வாய்ப்பில்லை”
என்று வேதனை கலந்த கோபத்துடன் கூறினார் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------