அச்சுறுத்தும் வானிலை

 • மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மூன்றரை லட்சம் புத்தகங்களுடன் மிளிரும் அறிவின் பிரமாண்டமாக நூலகம் காட்சியளிக்கிறது.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த துவரம் பருப்பு, பாமாயில் ரூ.928 கோடிக்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

• வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திராயன் 3 விண்கலம். பூமியில் இருந்து ஏவப்பட்ட 16வது நிமிடத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

• .யமுனை ஆற்றில் நீர்மட்டம் குறைந்தபோதும் வடியாத வெள்ளம். அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதிகளையும் வெள்ளம் ஆக்கிமித்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது. வெள்ளத்தில் தத்தளிக்கும் நொய்டாவில் குடியிருப்புகளில் சிக்கியவர்களை படகுகளில் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

----------------------------------------------------

பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர் 'தகைசால் தமிழர்' திரு. சங்கரய்யா அவர்களின் 102-ஆவது பிறந்தநாள்!
வாழ்த்துக்கூறி வணங்கினேன்.
                                   - மு.க.ஸ்டாலின்.

----------------------------------------------------

• அசாம் – மேகாலயா தேசிய நெடுஞ்சாலையை மழை வெள்ளம் மூழ்கடித்தது. பல கி.மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து காத்திருக்கின்றன. பீகார் சட்டப்பேரவை வளாகத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மின்மோட்டர்கள் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பொதுசிவில் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. வரும் 28ம் தேதி வரை கருத்து தெரிவிக்கலாம் என தேசிய சட்ட ஆணையம் அறிவித்துள்ளது.

• புதுச்சேரியில் 25 டன் அலுமினியம் பவுடர் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மிதமானது முதல் அதிகன மழை அடுத்த 5 நாட்களுக்கு பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மும்பை, பால்கர், தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்துதுர்க் மற்றும் துலே ஆகிய ஊர்களுக்கு இந்த எச்சரிக்கை கொடுக்கப்ப்டடுள்ளது. மும்பையில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 ராய்காட், ரத்னகிரி பகுதியில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடிய வாய்ப்புள்ளது.

-------------------------------------

மறைமலையடிகள்.

மறைமலையடிகளின் இயற்பெயர் வேதாச்சலம்.

 இவர் தமிழ் மீது கொண்ட பற்றால் தனது பெயரை தமிழில் மறைமலையடிகள் என்று மாற்றிக்கொண்டார். 

1876ம் ஆண்டு ஜீலை 15ம் தேதி திருக்கழுகுன்றத்தில் பிறந்தார். இவரது தந்தை சொக்கநாத பிள்ளை, தாய் சின்னம்மையார். தந்தை அறுவைசிகிச்சை நிபுணர்.

இந்த தம்பதிகளுக்கு நீண்ட காலமாக குழந்தை இல்லை. இதையடுத்து இவர்கள் இருவரும் திருக்கழுகுன்றத்தில் உள்ள சிவன் வேதாச்சலத்தையும், அம்பாள் சொக்கம்மையையும் வேண்டி பெற்ற குழந்தையென்பதால் மலைமலையடிகளுக்கு வேதாச்சலம் என்ற பெயர் சூட்டினார்கள்.

மறைமலையடிகள் தனது குழந்தைகள் திருநாவுக்கரசு, நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழி பெயர்களை திருஞான சம்பந்தம் – அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் – மணிமொழி, சுந்தரமூர்த்தி – அழகுரு, திரிபுர சுந்தரி – முந்நகரழகி என்று தனித்தமிழ் மொழியில் மாற்றிவிட்டார்.

இவர் தந்தையின் மறைவையடுத்து பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், நாகையில் புத்தகக்கடை வைத்திருந்த நாராயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 

சைவ சித்தாந்த சண்டமாருதம் என்று புகழ்பெற்ற சூளை சோமசுந்தர நாயக்கரிடம் சைவ சித்தாந்தம் கற்றார்.

இவர் மீனலோச்னி என்ற செய்திதாள், சைவ சித்தாந்த தீபீகை ஆகிய செய்தி இதழ்களில் பணியாற்றினார். 

அவரது கனவே தமிழாசிரியராக வேண்டும் என்பதுதான், அதற்காக தன்னைதகுதிப்படுத்திக்கொண்டிருந்தார். 

பின்னர் ஞானசேகரம் என்ற இதழை 1902ம் ஆண்டு தொடங்கி நடத்தினார். பின்னர் அதன் பெயரை தனித்தமிழில் அறிவுக்கடல் என்று மாற்றினார். சென்னை கிறிஸ்த்தவ கல்லூரியில் அவரது லட்சியப்பணியான தமிழாசிரியர் பணி கிடைத்தது. 1905ம் ஆண்டு சைவ சித்தாந்த மகா சமாசம் என்ற அமைப்பை உருவாக்கினார்.

பல ஆண்டு பேராசிரிய பணிக்கு பின்னர், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை 1912ம் ஆண்டு நிறுவினார். ராமலிங்க வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றி சங்கம் செயல்பட்டது. 

பின்னர் அதன் பெயரையும் பொது நிலைக்கழகம் என தமிழ்படுத்தினார். பல புத்தகங்களை திருமுருகன் அச்சு கூடத்தை ஏற்படுத்திவெளியிட்டார். 

இவர் பல்லாவரம் முனிவர் என்றும் அழைக்கப்பட்டார்.

தனது 75வது வயதில் 1950ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி மறைந்தார்.

 இவரது தமிழ்தொண்டை பாராட்டி சென்னையில் உள்ள ஒரு பாலத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

பரிதிமாற் கலைஞரும், மறைமலையடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இருபெரும் முன்னோடி தலைவர்கள். 

----------------------------------------------

பெருந்தலைவர் காமராசர் 

பெருந்தலைவர் காமராசர் விருதுநகரில் குமாரசாமி - சிவகாமி தம்பதியினருக்கு 15.07.1903 அன்று மகனாகப் பிறந்தார்.

 பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலை பார்த்தார்.

 அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுகளில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார்.

காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களின் அறிமுகத்தால் 1919 ஆம் ஆண்டு முதல் பல்வேறு சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். 

1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றார். 

தனது 16ஆவது வயதில் கள் கடை போராட்டம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், வேதாரண்ய உப்பு போராட்டம், விருதுநகர் குண்டுவெடிப்பு என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு 9 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அரசியல் பணியில் ஈடுபட்டு வந்தார். 1936 ஆம் ஆண்டு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், 1937 மற்றும் 1946 ஆம் ஆண்டுகளில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராகவும், 1941 ஆம் ஆண்டு விருதுநகர் நகர்மன்றத் தலைவராகவும், 1952 ஆம் ஆண்டு விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பல்வேறு பொறுப்புகளில் சிறந்து விளங்கி மக்கள் பணியில் ஈடுபட்டு வந்தார். 

1954 ஆம் ஆண்டு குடியாத்தம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்ற பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

தன்னுடைய அயராத உழைப்பினால் ஆட்சியில் சிகரம் தொட்ட கர்மவீரர் காமராசர் அவர்கள், தனது 9 ஆண்டு கால ஆட்சியில் கிராமங்கள்தோறும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கி வைத்து கல்வியில் மறுமலர்ச்சியை உருவாக்கினார். 

ஏழை மாணவர்கள் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு ஏற்ப, இலவச மதிய உணவுத் திட்டத்தினைக் கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் பள்ளிகள் இல்லாத ஊரே இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் கல்வி வளர்ச்சிக்கு அரும் பெரும் தொண்டாற்றினார்.

விவசாயம், தொழில் உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் வளர்ச்சியடையச் செய்வதற்கு பெரும் பங்காற்றினார். 

மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டி விவசாயத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

பாசன வசதிகளை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி கொடுத்தார், இலவச கல்வி, இலவச மதிய உணவு, இலவச பாடப்புத்தகம் எல்லாவற்றுக்கும் முன்னோடி காமராசரே.

1964 ஆம் ஆண்டு மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்ற காமராசர் அவர்கள், நேருவின் மறைவிற்குப் பின்னர் இந்தியாவின் பிரதமரை இரண்டுமுறை தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

காமராசர் முதல்வரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். 

பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார்.

1975 அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்றே உயிர் துறந்தார். 

அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை.

 தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார்.

காந்தி பிறந்த தினம் காமராசர் இறந்த தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. வாய்மை, தூய்மை, நேர்மை, எளிமை, அடக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாகத் திகழ்ந்த பெருந்தலைவர் காமராசரின் மறைவுக்குப் பிறகு 1976 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?