குழி பறிப்பது யார்?

 சசிகலாவை கட்சியில் சேர்க்க பணத்தாசையை காட்டி எடப்பாடிக்கு புதிய நெருக்கடியை மூத்த நிர்வாகிகள் கொடுத்து வருகின்றனர். 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக நான்கு பிரிவுகளாக பிரிந்துவிட்டது. ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தனித்தனியாக அதிமுகவுக்கு சொந்தம் கொண்டாடி வந்த நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி தட்டிப்பறித்துக் கொண்டார். 

அந்தநேரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொங்கு மண்டலத்தை சேர்ந்த வேலுமணி, தங்கமணி, தர்மபுரி கே.பி.அன்பழகன், சி.வி.சண்முகம், செங்கோட்டையன் ஆகியோர் மிகவும் துணையாக இருந்தனர்.

கட்சியை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்லும் வகையில் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கினார். முதற்கட்டமாக 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளரை கொண்டு வர முடிவு செய்தார்.

 இதன்மூலம் அத்தொகுதியிலேயே அவர்களுக்கு ஒரு சீட் கொடுப்பதன் மூலம் மிகுந்த ஆர்வமுடன் கட்சி வேலையில் ஈடுபடுவார்கள். இதை வைத்து ஆட்சியை பிடித்துவிடலாம் என திட்டமிட்டார். ஆனால் இதற்கு மூத்த நிர்வாகிகள் பலரும் ஒத்துழைக்கவில்லை.

குறிப்பாக கொங்கு பகுதியை சேர்ந்த மூத்த நிர்வாகிகள், இதற்கு உடன்படவில்லை. தங்களின் செல்வாக்கை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நினைத்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமியால் நினைத்ததை செய்ய முடிவில்லை. இவர்களை எதிர்த்தால் கட்சியில் பல இன்னல்களை சந்திக்க நேரிடும் என நினைத்து மாவட்ட செயலாளர் நியமன முடிவை கைவிட்டுவிட்டாார்.

 அடுத்ததாக பாஜவை அதிமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்பதோடு இல்லாமல் ஓ.பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் கட்சியில் இணைத்தே ஆகவேண்டும் என்பதில் கொங்கு நிர்வாகிகள் உறுதியாக இருக்கிறார்கள்.

வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க போதிய பணம் தங்களிடம் இல்லை என எடப்பாடி பழனிசாமியிடம் கைவிரித்து விட்டனர். சசிகலாவை கட்சியில் சேர்ப்பதன் மூலம் தேர்தலுக்கான செலவுகளை அவரே கவனித்துக்கொள்வார். அதில் எந்த பிரச்னையும் நமக்கு கிடையாது என வேலுமணி தரப்பினர் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. 

சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைத்தால் அவர்கள் குடைச்சல் கொடுப்பதுடன் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை வைத்து நிர்வாகிகள் அனைவரையும் விலைக்கு வாங்கி விடுவார்கள்.

நமது எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என எடப்பாடி தெரிவித்தும் அதுபோன்று எதுவும் நடக்காது என உறதி கூறியுள்ளனர். இதனால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி தவித்து வருகிறார். இதற்கிடையில் எந்த வம்பு தும்புக்கும் போகாத செங்கோட்டையனை களம் இறக்கியதும் கொங்கு மண்டல நிர்வாகிகள் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரிந்துபோனது. இப்போதே எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

அதிமுகவில் புதிய பதவிகளை கொண்டு வந்து புதுரத்தம் பாய்ச்ச வேண்டும் என பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முயற்சிகள் மேற்கொண்டார். 

ஆனால் மூத்த நிர்வாகிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதையும் மீறி நிர்வாகிகளை நியமித்தால் கோஷ்டி மோதல் ஏற்படும். ஆங்காங்கே பிரச்னையை கிளப்பி விடுவார்கள்.

 தன்னுடன் இருப்பவர்களில் உண்மையாக இருப்பது யார்? 

குழி பறிப்பவர்கள் யார்? 

என்பதை எடப்பாடி தெரிந்து வைத்துள்ளார். என்றாலும் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தவித்து வருகிறார்.

மக்களாட்சியை காக்கவே

ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பை அடையும் வரை நாம் இணைந்து போராடுவோம் என்று 4 முதல்வர்கள், 2 துணை முதல்வர் உள்ளிட்ட 14 தேசிய கட்சிகள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியுடன் கூறினார்.

 தொகுதி மறுவரையறைக்கு எதிரான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் இருக்கும், ஆட்சி செய்யும் ஒரு கட்சியின் அழைப்பினை ஏற்று இத்தனை இயக்கங்கள், கட்சிகள் வந்திருப்பது இக்கூட்டத்தின் மாபெரும் சிறப்பு.

இந்திய ஜனநாயகத்தை காக்க நாம் அனைவரும் ஓரணியில் திரண்டிருக்கிறோம் என்பதை இந்தியாவுக்கு உணர்த்துவதாக உங்களது வருகை அமைந்திருக்கிறது. 

இந்திய கூட்டாட்சியை காக்கும் வரலாற்றில் மிகமிக முக்கியமான நாளாக இந்த நாள் அமையப்போகிறது. 

மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு என்பது, நம்மை போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப்போகிறது. மக்கள்தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மை போன்ற மாநிலங்கள், அதன் காரணமாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையில் நமது பிரதிநிதித்துவத்தை அதிகம் இழக்க நேரிடும்.

எனவேதான் இதனை நாம் கடுமையாக ஆணித்தரமாக எதிர்க்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். 

இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், மக்கள்தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களை தண்டிப்பதாக இந்த நடவடிக்கை இருக்கப் போகிறது. மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறைகிறது.

இரண்டு ஆண்டு காலமாக மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறது. 

ஆனால் நீதிக்கான அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்படுகின்றன. ஏனென்றால் நாட்டின் கவனத்தை ஈர்க்க அவர்களுக்கு அரசியல் வலிமை இல்லை. எனவே, நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைவது அல்லது நமது பிரதிநிதித்துவம் குறைவது என்பதை நம்முடைய அரசியல் வலிமையை குறைப்பதாகத்தான் பார்க்க வேண்டும். இது வெறும் எண்ணிக்கையை பற்றியது மட்டுமல்ல – இது நமது அதிகாரம், நமது உரிமைகள் மற்றும் நமது எதிர்காலத்தின் நலன்களை பற்றியது.

பிரதிநிதித்துவம் குறைந்து வருவதால், நமது மாநிலங்கள் நமக்கு தேவையான நிதியை பெறுவதற்கு கூட போராட வேண்டி வரும். நமது விருப்பம் இல்லாமல் நமக்கான சட்டங்கள் வடிவமைக்கப்படும். 

நமது மக்களை பாதிக்கும் முடிவுகள், நம்மை அறியாதவர்களால் எடுக்கப்படும். பெண்கள் அதிகாரம் அடைவதில் பின்னடைவுகளை சந்திப்பார்கள். 

மாணவர்கள் முக்கிய வாய்ப்புகளை இழப்பார்கள். உழவர்கள் ஆதரவின்றி பின்தங்குவார்கள். நமது பண்பாடு, அடையாளம் மற்றும் முன்னேற்றம் ஆபத்தை சந்திக்கும்.

மறுசீரமைப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும். இங்கே இருக்கும் ஒவ்வொரு மாநிலமும், மக்கள்தொகை கட்டுப்பாட்டின் மூலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காட்டியுள்ளன. இத்தகைய மாநிலங்களை தண்டிப்பதாக இந்த நடவடிக்கை இருக்கப் போகிறது. 

மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவதன் மூலமாக நமது எண்ணங்களை சொல்வதற்கான வலிமை குறைகிறது.

* பாரம்பரிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பெட்டகம்
தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த்சிங் மான், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்பட 7 மாநிலங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் 24 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கூட்டத்தில் கலந்துகொண்ட விருந்தினர்களுக்கு, தமிழ்நாட்டின் அடையாளங்களாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற பொருட்களான பத்தமடை பாய், தோடர்களின் சால்வை, காஞ்சிபுரம் கைத்தறி பட்டுப்புடவை, ஊட்டி வர்க்கி, கன்னியாகுமரி கிராம்பு, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஈரோடு மஞ்சள், கொடைக்கானல் பூண்டு ஆகிய தமிழ்நாட்டின் சிறப்பு வாய்ந்த பொருட்கள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் தயாரித்த அழகிய பெட்டியில் அடுக்கப்பட்டு பரிசாக வழங்கப்பட்டது.

* தாய்மொழிக்கு முக்கியத்துவம்
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் மாநில மொழிகளில் பெயர்ப்பலகை இடம்பெற்றிருந்தது. இதன்படி அந்தந்த மாநிலங்களின் தாய்மொழியுடன் ஆங்கிலத்திலும் தலைவர்களின் பெயர் பலகை இடம் பெற்றிருந்தது. மேலும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி, பஞ்சாபி ஆகிய 5 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய மொழிபெயர்ப்பு கருவியும் வைக்கப்பட்டிருந்தது.

* இந்த நாள் வரலாற்றில் பொறிக்கப்படும்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: நமது நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்கள் நியாயமான தொகுதி மறுசீரமைப்பை உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதுகாக்க ஒன்றிணைந்த நாளாக இன்று வரலாற்றில் பொறிக்கப்படும். நியாயமான தொகுதி மறுசீரமைப்பிற்கான நமது உறுதிப்பாட்டில் ஒன்றுபட்ட அனைத்து முதல்-மந்திரிகளையும், அரசியல் தலைவர்களையும் இந்த கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?