வெற்றி யார் பக்கம்?
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகங்களை அரசியல் கட்சிகள் இப்போதே வகுக்கத் தொடங்கிவிட்டன.

தி.மு.க.வை அரை நூற்றாண்டு காலமாக எதிர்த்தும், பல முறை வெற்றி பெற்றும் உள்ள அ.தி.மு.க, இப்போதும் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், . பிரபல பத்திரிகை ஒன்று தனியார் நிறுவனத்துடன் நடத்திய கருத்துக்கணிப்பின் முடிவுகளை வெளியிட்டு, தமிழ்நாட்டில் அடுத்த முதல்வருக்கான ரேஸில் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் விஜய்யும் இருப்பதாக வெளியிட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. நாம் தமிழர் கட்சி சீமானுக்கு இடமில்லையா, இது நியாயமான கருத்துக்கணிப்பா என்று அவர் தரப்பினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
காங்கிரஸ் இல்லாத பாரதம், கழகங்கள் இல்லாத தமிழகம் என்பதுதான் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க.வின் இலக்கு. தமிழ்நாடு இரண்டு கழகங்களின் கட்டுப்பாட்டில் இருந்ததால், அம்மையார் ஜெயலலிதா உடல்நலிவுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைப் பயன்படுத்திக்கொண்டு காய்களை நகர்த்தி, அவர் மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது.

தி.மு.கழகத்தைப் பொறுத்தவரை, கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகும் அது வலிமையுடன் இருக்கிறது. இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், ஒரு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் என எல்லாக் களத்திலும் தி.மு.க. மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
அ.தி.மு.க. முன்புபோல தி.மு.க.வை வீரியமாக எதிர்கொள்ள முடியாத சூழல் உள்ளது. பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை போன்றவர்கள் அதிரடியாக பேட்டிகள் தந்தாலும், அது அன்றைய நாளின் வெப்பநிலையாக இருக்கிறதே தவிர, தொடர் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. நாம் தமிழர் கட்சியின் சீமான் சகட்டுமேனிக்கு தி.மு.க.வை விமர்சிக்கிறார்.
அவரது கட்சியின் வாக்கு வங்கியும் உயர்ந்து, கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனினும், திராவிட வெறுப்பு என்ற மனநிலையில் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சில் நிறைந்த தலைவர்களையெல்லாம் ஆதாரமின்றி கொச்சைப்படுத்தும் அவருடைய பேச்சும், அவரைச் சூழ்ந்துள்ள சிக்கல்களும் அக்கட்சியிலிருந்து பல நிர்வாகிகளை விலகச் செய்து வருகிறது.
இந்த நிலையில்தான் புது வரவாக விஜய் களமிறங்கியிருக்கிறார். சினிமாவில் பிரபல ஹீரோவாக அவர் இருப்பதால் புதிய வாக்காளர்கள் முதல் நடுத்தர வாக்காளர்கள் வரை அவர் நன்கு அறிமுகமானவர்கள். இளைஞர்களையும் பெண்களையும் ரசிர்களாக வைத்திருக்கக்கூடியவர்.
அவை அனைத்தையும் வாக்குகளாக மாற்றிவிடுவார் என்று அவரது கட்சியினரும், பா.ஜ.க போன்ற தி.மு.க எதிர்ப்புக் கட்சியினரும் நம்புகிறார்கள்.
த.வெ.க.வின் பொதுக்குழுவில் பேசியவர்களின் கருத்துகளும் அப்படியேதான் இருந்தன. விஜய்யும் அதையே எதிரொலித்துள்ளார்.
தி.மு.க.வுக்கும் த.வெ..கவுக்கும்தான் போட்டி என்று விஜய் பேசியதை முதலில் எதிர்கொள்ள வேண்டிய கட்சி அ.தி.மு.க.தான். அதன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாங்கள்தான் எதிர்க்கட்சி என்கிறார்.
பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தங்கள் கட்சி மீதான த.வெ.க.வின் விமர்சனங்களுக்கு பதிலளித்துவிட்டு, தி.மு.க. அரசு ஊழல் செய்கிறது என்று தனக்கான மெயின் சப்ஜெக்ட்டுக்குப் போய்விடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீமான், தி.மு.க.வைத் தனியாக எதிர்க்கும் விஜய்யை பாராட்டுகிறேன் என்கிறார்.
அ.தி.மு.க.வின் செயல்பாடுகளைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள பா.ஜ.க., தி.மு.க.வுக்கு எதிரான காய்நகர்த்தல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் மேற்கொண்டிருப்பதன் மூலம், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் வெப்பநிலை தமிழ்நாட்டில் இப்போதே தெரியத் தொடங்கிவிட்டது.
தி.மு.க. தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், “நம்மிடமிருந்து வெற்றியைப் பறிக்க பல எதிரிகளை உருவாக்குவார்கள்” என்று பேசியிருக்கிறார்.
![]() |