பயத்தினால்
வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டம்-ஒழுங்கு தொடர்பாக காவல் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:

பேரவைத் தலைவர் அவர்களே, நேற்று நான்கு கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் இங்கே தெரிவித்தார்கள். கோவை சம்பவத்தைப் பொறுத்தவரையில், முதற்கட்டமாக தற்கொலை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சம்பவத்தைப் பொறுத்தவரை, விசாரணை நடைபெற்று வருகிறது. சிவகங்கையில் நடைபெற்ற கொலை சம்பவம் குறித்து விசாரித்ததில், குடும்பத் தகராறு எனத் தெரியவந்துள்ளது.
ஈரோட்டில் நடைபெற்ற சம்பவம் குறித்து நான் இப்போது விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ஜான் (எ) சாணக்கியன் என்பவர் உயர்நீதிமன்ற நிபந்தனை பிணையின் அடிப்படையில் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் நேற்று கையொப்பமிட்டுவிட்டு, தனது மனைவியுடன் காரில் திருப்பூர் நோக்கிச் சென்றார் இருந்தபோது, பின்னால் காரில் சென்ற அடையாளம் தெரியாத சிலர் இருவரையும் அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார்கள். காயமடைந்த சாணக்கியன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி, சித்தோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி செல்லதுரை கடந்த 2020 ஆம் ஆண்டு சேலம் மாநகரில் கொலை செய்யப்பட்ட வழக்கில், சாணக்கியன் இரண்டாவது எதிரி என்பதால், அதற்குப் பழிவாங்குகிற நோக்கத்தில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து இங்கு சில கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்கள். இவை குறித்த புள்ளிவிவரங்களோடு இந்த அவைக்கு சிலவற்றை நான் தெரிவிக்க விரும்புகிறேன்.
காவல் துறை சுதந்திரமாகச் செயல்பட்ட, குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டப்படியான நடவடிக்கைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. எந்த பாரபட்சமும் இதில் காட்டப்படுவதில்லை. குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு மேற்கொள்ளப்படும் துரித நடவடிக்கைகள் ஒருபுறம்; குற்றச் சம்பவங்கள் நிகழாமல் நடைபெறாமல் இருக்க மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மறுபுறம் என இரு வகையிலும் காவல் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மற்றும் கூலிப்படையினர் எனக் கருதப்படுவோரின் நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு முன்னெச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது, தேவையான இனங்களில் குண்டர் சட்டத்தின் கீழும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் 4 ஆயிரத்து 572 சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு காவல் துறை மேற்கொண்ட கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, 2023 ஆம் ஆண்டு கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் 49 ஆயிரத்து 280 ஆக இருந்தது; 2024 ஆம் ஆண்டில் அது 31 ஆயிரத்து 498 ஆகக் குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17 ஆயிரத்து 782 குற்றங்களைக் குறைத்துள்ளோம்.
சில கொலைக் குற்றங்கள் நடைபெறும் காட்சிகள், சமூக ஊடகங்களில் வெளிவரும் போது அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டுப் பரப்பப்படுகிறது. உண்மையில் எண்ணிக்கையின் அளவில் பார்க்கும்போது, 2024 ஆம் ஆண்டில் கொலைக் குற்றங்கள் 6.8 விழுக்காடு குறைந்துள்ளன. முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது 109 கொலைகள் குறைந்துள்ளன. மேலும், பழிக்குப் பழி வாங்கும் கொலைகளின் எண்ணிக்கையும் 2024 ஆம் ஆண்டில் 42.72 விழுக்காடு குறைந்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலம், பொது மக்கள் அதிகளவில் கூடும் திருவிழாக்கள், பெரிய பொழுதுபோக்கு இடங்கள், சுற்றுலாத்தலங்கள் போன்ற இடங்களில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திய காவல் துறை கூடுதல் எண்ணிக்கையிலான காவலர்களை ஈடுபடுத்தி, எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் செவ்வனே பணியாற்றி வருகின்றனர் என்பதை இந்த அவையில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள்.
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதிலும் இந்த அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. 2023 ஆம் ஆண்டு 181 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது, 2024 ஆம் ஆண்டில் 242 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் காவல் துறை காட்டிய தீவிர அக்கறையே இதற்கு காரணம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 2024 ஆம் ஆண்டில் மட்டும், 150 சரித்திரப் பதிவேடு ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கு மேல் கடுங்காவல் தண்டனை நீதிமன்றங்கள் மூலம் பெறப்பட்டுள்ளது.
இறுதியாக ஒரேயொரு புள்ளிவிவரத்தை மட்டும் தங்கள் வாயிலாக இந்தப் பேரவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 2012 முதல் 2024 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுவாரியாக ஒப்பிட்டுப் பார்க்கும்போது, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அதாவது, 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,943. இதுதான் கடந்த 12 ஆண்டுகளில் நிகழ்ந்த மிக அதிகமான எண்ணிக்கை. 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,927. இந்த காலத்திலும், லாக்-டவுன் இருந்தபோதும், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில், 2020 ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலைகளின் எண்ணிக்கை 1,661.
கடந்த ஆண்டுகளின் வரலாறு இவ்வாறு இருக்க, தற்போது நமது ஆட்சிக் காலத்தில் காவல் துறை தொடர்ந்து வரும் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த
12 ஆண்டுகளில் 2024 ஆம் ஆண்டில்தான் மிக, மிகக் குறைவான எண்ணிக்கையில், அதாவது, 1,540 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன; இதுதான் உண்மை. இதை நடுநிலையாளர்களும், பொது மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள்.
குற்றங்களைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து, பொது அமைதியைத் தொடர்ந்து நிலைநாட்டிட தமிழ்நாடு காவல் துறை எனது தலைமையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்விரோதம் காரணமாக நடைபெறும் சில நிகழ்வுகளை வைத்து, இந்த அரசின் மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் அடைய நினைப்பவர்கள் சென்ற ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி சீரழிந்து கிடந்தது என்பதை நான் இங்கு தெரிவித்த புள்ளிவிவரங்கள் அடிப்படையில் எண்ணிப் பார்த்தேன் பார்க்க வேண்டும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.