நீதிபதியும் சமம்!
அசைக்க முடியாத அரசியல் சக்திகள், அதிகார வர்க்கங்கள், செல்வாக்கு மிக்கவர்கள் இப்படி யாராக இருந்தாலும் கோர்ட் படிகளில் ஏறும்போது , ஒரு நொடியாவது மன அதிர்ச்சிக்குள்ளாவார்கள். கால்களில் ஒரு நடுக்கம் ஏற்படும். மனதின் அதிர்ச்சியைக் காட்டிக்கொள்ளாமல் முகம் புன்னகைக்கும்.
இது சினிமா காட்சி அல்ல. நீதியின் வலிமை.

பிரதமர் முதல் பெரிய அரசியல் தலைவர்கள் யாராக இருந்தாலும் அவரது ஆதரவைப் பெறுவதற்கு மட்டுமின்றி, அவரை சந்திப்பதற்கே காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று அரசியல் உலகம் ஆச்சரியப்பட்ட காலத்தில், ஒரு மாஜிஸ்ட்ரேட் அவரை நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே காலை முதல் மாலை வரை காத்திருக்கச் செய்தார் என்பதும், மாலையில் முழு தீர்ப்பும் வாசிக்கப்பட்டபிறகு, ஜெயலலிதாவையும் அவருடன் குற்றத்தில் ஈடுபட்டவர்களையும் அப்படியே சிறைக்கு அனுப்பினார் என்பதும் இந்தியாவின் நீதியின் வலிமையைக் காட்டியது.
ஜனநாயக நாட்டில் வாழும் எளிய மக்களின் கடைசி நம்பிக்கை என்பது நீதிமன்றம்தான்.
நீதியை வழங்கக்கூடியவர்கள் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருந்தாக வேண்டும்.
ஆனால், அது முழுமையாக நடைபெறுவதில்லை. பெரிய வழக்குகளில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்பினை வழங்கியவர்கள், அதனைத் தொடர்ந்து வெவ்வெறு பதவிகளில் நியமிக்கப்படுவதும், அரசியல் சார்ந்து இயங்குவதையும் தொடர்ந்து பார்க்க முடிகிறது.
இன்றைய ஊடக வளர்ச்சியில் சாதாரண மக்களும் இதனை அறிந்தே இருக்கிறார்கள்.
டெல்லி உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி யஷ்வந்த் சர்மா வீட்டில் மார்ச் 14ந் தேதி ஏற்பட்ட தீவிபத்தையடுதது, தீயணைப்பு வீரர்கள் பழைய பொருட்களை வைக்கும் அறையில் பரவிய தீயை அணைத்தார்கள். அங்கு சாக்கு மூட்டைகளில் கத்தை கத்தையாக பணம் எரிந்த நிலையில் இருந்தது தெரியவந்தது.
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மர்மத்தைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து இது பற்றி விசாரிக்க உத்தரவிட்டார்.
நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் கேள்வியாக எழுப்பப்பட்டு, அனல் பறந்தது. இந்த நிலையில்தான், உச்சநீதிமன்றத்தின் கொலிஜியம் கூடி, நீதிபதி யஷ்வந்த் வர்மாவை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
முழுமையான விசாரணையில்தான், சாக்கு மூட்டையில் இருந்த பணத்தின் பின்னணி என்ன என்பது தெரியும் என்றாலும், சந்தேகத்திற்குரிய நீதிபதியை இன்னொரு நீதிமன்றத்திற்கு இட மாறுதல் செய்வது மட்டும் போதுமானதா என்ற கேள்விக்கு சட்ட அறிஞர்கள் பல விளக்கங்களை அளித்து வருகிறார்கள்.
உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் மாத்யூஸ் நெடும்பாரா உள்ளிட்ட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
நீதிபதி வர்மா வீட்டில் பணம் சிக்கியது தொடர்பாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீதான குற்றச்சாட்டுகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெற்றே வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என 1991ல் வழங்கப்பட்ட தீர்ப்பைக் காரணம் காட்டாமல், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
பிக்பாக்கெட்டாக இருந்தாலும் சாக்குமூட்டை பணமாக இருந்தாலும் குற்றம் குற்றம்தான்.
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறபோது, நீதியை நிலைநாட்டுகிறவர்களுக்கும் அதே அளவுகோல்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள்.