மோசமான நடுக்கங்கள்:
மியான்மர் பூகம்பம்: 10,000 பேர் இறந்ததாக அச்சம்.
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 1600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3400க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மத்திய மியான்மரில் உள்ள சகாயிங்கின் வடமேற்கில் பிற்பகல் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சில நிமிட இடைவெளியிலேயே 6.4 ரிக்டர் அளவிலான மற்றொரு நில அதிர்வும் ஏற்பட்டது.
மியான்மரின் பெரும்பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன, பாலங்கள் இடிந்து விழுந்தன, சாலைகள் விரிசல் அடைந்தன. இந்த பேரழிவு தாய்லாந்து வரை பரவியது, அங்கு பாங்காக்கில் கட்டுமானத்தில் இருந்த 30 மாடி வானளாவிய கட்டிடம் இடிந்து விழுந்து பலரின் உயிரைப் பறித்தது.
கடந்த நூற்றாண்டில் தென்கிழக்கு ஆசிய நாட்டை உலுக்கிய மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றான இந்த நிலநடுக்கம், விமான நிலையங்களையும் ஸ்தம்பிக்க வைத்தது.
மியான்மரின் எதிர்க்கட்சியான தேசிய ஒற்றுமை அரசாங்கத்தின் ஆரம்ப மதிப்பீட்டின்படி, குறைந்தது 2,900 கட்டமைப்புகள், 30 நெடுஞ்சாலைகள் மற்றும் ஏழு பாலங்கள் பூகம்பத்தால் அழிக்கப்பட்டன.
நய்பிடாவில் உள்ள விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு கோபுரம் இடிந்து விழுந்ததால், அதை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் சேவையின் முன்கணிப்பு மாதிரியாக்கம், மியான்மரின் இறப்பு எண்ணிக்கை 10,000 ஐ தாண்டக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது.
இந்தியா, ரஷ்யா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் பணியாளர்களை விமானங்கள் மூலம் அனுப்பின.
இதுவரை மோசமானநிலநடுக்கங்கள்:
இந்நிலையில், வரலாற்றில் இதுவரை அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மிக மோசமான நிலநடுக்கங்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
- ஜனவரி 23, 1556 அன்று,சீனாவின் ஷான்சி மாகாணத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கம், 830,000 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது வரலாற்றில் மிகவும் மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது 8.0 முதல் 8.3 வரை ரிக்டர் அளவில் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
- 2010 ஆம் ஆண்டு ஹைதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் போர்ட் -ஓ-பிரின்ஸ் பெருநகரப் பகுதியை பேரழிவிற்கு உட்படுத்தியது. சுமார் 300,000 மக்களைக் கொன்றது மற்றும் 1,500,000 பேர் வீடுகளை இழந்தனர். ஜனவரி 12 ஆம் தேதி மாலை 4:53 மணிக்கு ஹைதி தலைநகரான போர்ட்-ஓ-பிரின்ஸிலிருந்து தென்மேற்கே சுமார் 15 மைல் (25 கிமீ) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 7.0 ரிக்டர் அளவைப் பதிவு செய்தது. அடுத்தடுத்து 5.9 மற்றும் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்களும் பதிவாகின
- ஜுலை 28, 1976 அன்று சீனாவின் டாங்ஷான் பகுதியில் அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.6 ஆக பதிவானது. இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 469 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், உயிரிழப்பு 3 லட்சத்தை கடந்ததாக கூறப்படுகிறது.
- டிசம்பர் 26, 2004 அன்று, இந்தோனேசிய தீவான சுமத்ராவின் கடற்கரையில் 9.1 ரிக்டர் அளவில் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் தூண்டப்பட்ட சுனாமி இந்தியப் பெருங்கடல் முழுவதும் பரவி, கிழக்கு ஆப்பிரிக்கா வரையிலான கடலோரப் பகுதிகளை நாசமாக்கியது. அதன் விளைவாக 13 நாடுகளில் குறைந்தது 230,000 மக்கள் உயிரிழந்தனர். இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் மற்றும் தாய்லாந்து ஆகியவை பெரும் சேதத்தை சந்தித்தன.
81 சிறு நீரகங்கள்
கடத்திய
மருத்துவர்கள்.
சிறுநீரக மோசடி மூலம் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட வழக்கில் மருத்துவர் வி.எம். கணேசன், அவரது மனைவி உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம், தருமபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2011 முதல் 2013 வரையிலான காலத்தில் நூற்றுக்கணக்கான ஏழை மக்களிடம் சிறுநீரக திருட்டு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக தருமபரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.
காவல்துறை விசாரணையில், மேற்கூறப்பட்ட மாவட்டங்களில் பத்துக்கும் மேற்பட்ட பிரபல தனியார் மருத்துவமனைகளில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணரான மருத்துவர் வி.எம். கணேசன் பணியாற்றியுள்ளார். இவர் சில மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்கள உடன் இணைந்து சிறுநீரகக் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கபட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவர் கணேசன் உள்பட கைது செய்யபட்டனர். இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத்துறை கடந்த 2015-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
அமலாக்கதுறை தனது குற்றபத்திரிகையில் மருத்துவர் வி.எம்.கணேசன், அவரின் மனைவி என். விஷ்வபிரியா, மருததுவர் ஜி. திருமால் ஆகியோர் முறைகேடாக 81 நபர்களிடம் இருந்து சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர் எனவும், இதன் மூலம் சுமார் 3 கோடி ரூபாய் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று மருத்துவர்களும் நேரில் ஆஜராகினர்.
அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கின் சாட்சி விசாரணை வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கும் என தெரிவித்த நீதிபதி, விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.