தூத்துக்குடி -25
தூத்துக்குடி மாவட்டம் தனி மாவட்டமாக உருவாகி 25 ஆண்டுகள் ஆகின்றன. அந்த மாவட்டத்தைப் பற்றிய சுவையான தகவல்களை இங்கே டி.எஸ்.ராஜஸ்வரி தொகுத்து வழங்கியுள்ளார்..
- கடும் தண்ணீர் பஞ்சத்தால் தண்ணீரை தூர்த்துக் குடித்ததால் தூத்துக்குடி என்று பெயர்க்காரணம் சொல்லப்படுகிறது. ஒருகாலத்தில் இலங்கையிலிருந்து கப்பலில் தண்ணீர் கொண்டுவரப்பட்ட ஊர். பின்னர் 1920-களுக்குப் பிறகுதான், தாமிரபரணி ஆற்று நீர் வல்லநாடு வழியாகத் தூத்துக்குடிக்குக் கொண்டுவரப்பட்டது. தண்ணீர் பஞ்சம் இருந்தாலும் வீரச் செறிவும், இலக்கியச் செறிவும், நுண்கலைச் செறிவும் வற்றாத ஊர் தூத்துக்குடி. அந்த ஊரைப் பற்றிய சில குறிப்புகள்:
- பாண்டியர்களின் துறைமுகமாகவும் முத்துகுளித் துறையாகவும் விளங்கிய கொற்கையின் அஃக சாலை தெருவில் அக்கால நாணயங்கள் அச்சிடப்பட்டிருக்கின்றன.
- இரும்பு, செம்பு காலங்களைச் சேர்ந்த நாகரிகங்களை வளர்த்தெடுத்த ஆதிச்சநல்லூர் ஒரு புராதன பண்பாட்டுச் சின்னமாகும்.
- சங்கக் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி சாசனம் தூத்துக்குடியின் பரதவர்களைப் பற்றி குறிப்பிடுகிறது.
- தாலமி எனும் கிரேக்கப் பயணி தனது பயணக் குறிப்பில் "சோஷிக் குரி' (சிறு குடி) என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றார்.
- அகஸ்டஸ் சீசரின் பியூட்டிஸ்கர் அட்டவணை ரோமானியரின் வர்த்தகம் நடைபெற்ற இடம் என்று தூத்துக்குடியைக் குறிப்பிடுகின்றது. "சோல்சியம் இண்டோரம்' என்ற பெயரில் குறிப்பிடப்படுவது தூத்துக்குடியாகும்.
- "பெரிப்ளஸ் எரித்ரேயன் கடல்' எனும் பண்டைய நூல் கொற்கையைப் பற்றி குறிப்பிடுகின்றது.
- மார்க்கோ போலோ எனும் இத்தாலியப் பயணி முத்துக்குளித்தல் மற்றும் இப்பகுதி மக்களின் வாழ்க்கை முறையைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
- பாஞ்சாலக்குறிச்சி கட்டபொம்மன், எட்டையபுரம் பாரதி, ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார், மாடசாமி, மணியாச்சியில் ஆஷைக் கொன்ற வாஞ்சிநாதன் என்று வீரம் விதைத்தவர்கள் ஏராளம்.
- 1908-ல் தென்னிந்தியாவின் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தம், தூத்துக்குடி கோரல் மில்லில் வ.உ.சியால் தொடங்கப்பட்டது. வ.உ.சி. கைதானதைத் தொடர்ந்து ஏற்பட்ட திருநெல்வேலி கலகம், இந்திய விடுதலைப் போரின் மிக முக்கியமான காலகட்டமாகும்.
- 1926-இல் காந்திஜி தூத்துக்குடி வந்தபோது சாரதாம்பாள் எனும் பெண்மணி, தன் நகைகளை காந்திஜியிடம் அளித்தார். சென்னை, ராஜதானியில் நகைகளை தானம் அளித்தப் பெண்மணிகளில் இவர் இரண்டாவது பெண்மணியாவார்.
- தூத்துக்குடி வளர்ச்சிப் பாதையின் சில மைல்கற்கள்
- 1536 - தூத்துக்குடி குடிகளான பரதவர்களின் முதல் கிறிஸ்தவ மதமாற்றம்.
- 1538 - பேதுரு திருச்சபை என்ற புனித ராயப்பர் ஆலயம் தோற்றுவிக்கப்பட்டது.
- 1567 - புன்னைக் காயலில் முதல் தமிழ்க் கல்லூரி தொடங்கப்பட்டது.
- 1582 - யேசு சபையினரின் குடியேற்றம் - பனிமய மாதா ஆலயம் நிறுவப்பட்டது.
- 1830 - சென்னா எனும் அவுரி அறிமுகமானது - இன்றுவரை தூத்துக்குடியின் முக்கிய ஏற்றுமதிப் பொருள் இது.
- 1842 - கலங்கரை விளக்கம் நிறுவப்பட்டது.
- 1866 - எடுத்த எடுப்பிலேயே முதல் நிலை முனிசிபாலிட்டியாக தூத்துக்குடி உருவானது.
- 1964 - தூத்துக்குடியின் புதிய துறைமுகம் உருவானது.
- 1974 - இந்தியாவின் 10-ஆவது மேஜர் துறைமுகமானது.
- 1979 - அனல் மின் நிலையத்தின் முதல் அலகு செயல்படத் தொடங்கியது.
- 1986 - தனி மாவட்டமாக உருவானது.
- 2008 - தமிழ்நாட்டின் 10-ஆவது மாநகராட்சியாக தூத்துக்குடி அறிவிக்கப்பட்டது.
- 2011 - தூத்துக்குடி, கொழும்பு தோணி போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
- தூத்துக்குடி கொழும்பு இடையே பயணியர் சொகுசுக் கப்பல் செலுத்தப்பட்டது.
- சுற்றுலாத்தலங்கள்
- *கழுகுமலை வெட்டுவான் கோவில் சமணர் படுகைகள் நிறைந்தது.
- *தென்னிந்தியாவின் மியாமி எனப்படும் அழகிய கடற்கரையைக் கொண்ட மணப்பாடு, குன்றின் மேலுள்ள திருச்சிலுவை, சவேரியார் குகை, கலங்கரை விளக்கம்.
- *அழகிய சுனையுடன் கூடிய அருஞ்சுனைக் காத்த ஐய்யனார் கோவில்.
- *குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா (அக்டோபர்)
- *ஏரல் சேர்மன் அருணாச்சலம் சுவாமி கோவில் விழாக்கள் (ஆகஸ்ட்)
- *வெள்ளப்பட்டி அதிசய கடல் மாதா கோவில் திருவிழா (மே)
- *தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழா (ஆகஸ்ட்)
- *புளியம்பட்டி புனித அந்தோணியார் திருவிழா (மே)
- *வீரபாண்டிய கட்டபொம்மன் விழா (ஜனவரி)
- *பாரதியார் விழா (செப்டம்பர், டிசம்பர்)
- *புனித சவேரியார் திருவிழா- மணப்பாடு (செப்டம்பர்)
- சில சுவாரஸ்யமான தகவல்கள்
- *காயல்பட்டினத்தில் உள்ள "மஹ்ழறா' எனும் குப்பாயம் பல மினார்களுடன் விளங்கும் நுணுக்கமான கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகும்.
- *"கோதிக்' கலைப் பாணியில் கட்டப்பட்ட திருச்சபை நாசரேத் - மூக்குப்பீறியில் உள்ள "சட்டாம்பிள்ளை வேதம்' எனும் திருச்சபையாகும்.
- *கொற்கையில் அஃகச் சாலை தெருவில் பாண்டியர் கால நாணயங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அக்கச் சாலை பிள்ளையார் கோவில் ஒரு வரலாற்று சின்னமாகும்.
- *நவதிருப்பதிகள், நவ கயிலாயங்கள் அமைந்துள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகா! இந்தியாவிலேயே கல்லினால் ஆன நாதஸ்வரம் இருப்பது ஆழ்வார் திருநகரியில் மட்டும்தான். குமரகுருபரர், நம்மாழ்வார் அவதரித்த தலம் இது.
- *பத்து ஏக்கருக்குக் குறைவான உப்பளத்தை வைத்திருப்பவர்கள் "தன்பாடு' உப்பள உற்பத்தியாளர்கள் எனப்படுகின்றனர். தூத்துக்குடியின் உப்பு உற்பத்தியில் "தன்பாடின்' பங்கு மிகச் சிறப்பானதாகும்.
- *முட்டை, முந்திரிப்பருப்பிலிருந்து தயாரிக்கப்படும் "மக்ரூன்' எனும் பிஸ்கெட் மிகச் சிறப்பானது.
- * "துணா' எனப்படும் மீனைப் பதப்படுத்தித் தயாரிக்கப்படும் "மாசி' எனும் உணவுப் பொருள் மிக அதிக அளவில் ஏற்றுமதியாகிறது.
- *கிறிஸ்தவர்கள் தங்களுக்கென்று ஏற்படுத்திக் கொண்ட முதல் குடியிருப்பான "முதலூர்' எனும் ஊரின் "மஸ்கத் அல்வா'வும் இம்மாவட்டத்தின் சிறப்பு உணவாகும்.
- *சுனாமியாலும்,கடும் புயலாலும் பாதிக்காத புவியியல் அமைப்பைக் கொண்டது தூத்துக்குடி. இதற்குக் காரணம், கடலில் உள்ள பவழப் பாறைகள்தான்.
நன்றி: தினமணி
_______________________________________________________________________________________________________________________________