விடுதலைப் புலிகள் தளபதிகள்
பலர் ஒரே இடத்தில் எவ்வாறு மாட்டிக்கொண்டனர் ?
புலிகளின் தளபதிகள் பலர் ஒரே நேரத்தில் ஒரு இடத்தில் வைத்து எவ்வாறு இலங்கை இராணுவத்தால் சுற்றிவளைக்கப்பட்டனர் ? புலிகளின் தலைவர் பிரபாகரன் அப்போது ஆனந்தபுரத்தில் இருந்தாரா ? அவரைப் பாதுகாக்கவா ஆனந்தபுரத்தில் உக்கிர போர் இடம்பெற்றது ? அப்போது பொட்டம்மான் எங்கே இருந்தார் ? இது போன்ற விடைகள் காணப்படாத பல கேள்விகள் இன்றும் புதைந்து கிடக்கிறது. ஆனந்தபுரத்தில் 2009ம் ஆண்டு நடைபெற்ற உக்கிரபோர் குறித்து நாம் ஏற்கனவே செய்தி வெளியிட்டிருந்தோம். இருப்பினும் பல தெளிவான மற்றும் துல்லியமான தகவல்கள் சில தற்போது கிடைக்கப்பெற்றிருப்பதால் மீண்டும் ஒரு முறை இது குறித்து எழுதவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
அப்போது இலங்கை இராணுவத்தின் 58 படைப்பிரிவின் தளபது ஷர்வேந்திர சில்வா, 53ம் படைப்பிரிவின் தளபதி கமால் குணரட்னே மற்றும் அதிரடிப்படைப் பிரிவு(8) இதன் தளபதி ரவிப்பிரியா ஆகியோர் இணைந்து பாரிய திடீர் தாக்குதல் ஒன்றை மார்ச் 30ம் திகதி ஆரம்பித்தனர். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர். 58ம் படைப்பிரிவு தெற்குநோக்கி புதுக்குடியிருப்பையும், 53ம் படைப்பிரிவினரும் 8ம் அதிரடிப்படையினரும் வடக்குபக்கமாகவும் புதுக்குடியிருப்பு நோக்கி நகர்ந்தனர். முன்னேறிய இராணுவ அணிகளான 58ம் படைப்பிரிவினரும், 53 மற்றும் 8ம் அதிரடிப்படையினரும், பச்சபுல்மோடை மற்றும் புதுக்குடியிருப்பு வீதியூடாக முன்னேறி, (புலிகள் நிலைகொண்டிருந்த இடத்துக்குப் பின்புறமாக) சந்தித்துக்கொண்டனர். இவ்விடத்தை இராணுவம் கைப்பற்றாமல் இருக்க பாரிய போரை சிறப்புத் தளபதிகளான அமுதாப் மற்றும் கோபித் ஆகியோர் தொடுத்தனர். ஆனால் நடந்த உக்கிரபோரில் அமுதாப் மற்றும் கோபித் ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.
இச்சமரில் அமுதாப் மற்றும் கோபித் வீரச்சாவடைந்த செய்தி, புலிகள் போராளிகளுக்கு மத்தியில் காட்டுத் தீயைப் போல பரவியது. இதனால் பலர் சோர்வடைந்து போனார்கள். இதேவேளை ஆனந்தபுரத்தில் பாரிய தாக்குதலுக்கு தம்மை தயார் படுத்திக்கொண்டு இருந்த போராளிகள், தம்மைச் சுற்றி இராணுவத்தினர் பெட்டியடித்துவிட்டதை உணர்ந்தனர். இவ்வாறே புலிகளின் பல மூத்த தளபதிகள் ஆனந்தபுரத்தில் சுற்றிவளைக்கப்பட்டனர். அங்கே தேசிய தலைவர் இருப்பதாக இராணுவம் சந்தேகப்பட்டது. இதனை அடுத்து அப்பகுதிக்கு மேலும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர். இராணுவம் மீது பாரிய தந்திரோபாயத் தாக்குதலை எவ்வாறு மேற்கொள்வது எனத் திட்டங்களைத் தீட்டி, நெறிப்படுத்திவிட்டு, தேசிய தலைவர் அவ்விடத்தில் இருந்து மார்ச் 26ம் தேதி புறப்பட்டு பிறிதொரு இடம் சென்றுவிட்டார் என பின்னர் அறியப்பட்டது.இருப்பினும் தேசிய தலைவர் 31ம் திகதி அவ்விடத்தில் இருந்து வெளியேறினார் என்று பிறிதொரு போராளி அதிர்வு இணையத்துக்கு மேலும் தெரிவித்தார்.
4ம், 6ம், 8ம், 12வது, 14வது மற்றும் 20வது, கஜபாகு படையணிகள், 5ம் விஜயபாகு படையணி, 9ம் ஜெமுனு படையணி, மற்றும் 11வது, 20வது இலகுரக படையணிகளோடு 2 அதிரடிப்படைப் பிரிவும், மற்றும் ஸ்பெஷல் போஃர்ஸ்சும் களத்தில் இறக்கப்பட்டன. இதுபோன்ற பாரிய படையணி இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆசியக் கண்டத்தில் பாவிக்கப்படவில்லை என்று கூடச் சொல்லலாம் அளவுக்கு இது அமைந்திருந்தது. இதேவேளை வெந்தபுண்ணில் வேல் பாய்வதுபோல, அவசரகாலத்தில் முன்னரங்கில் உள்ள புலிகளுக்கு ஆயுதங்களை வழங்க, பாவிக்கப்படும் அம்பலவாணன் பொக்கணை-பச்சைப்புல்மோடை வீதியையும் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர். இதனால் புலிகளின் ஆயுத வழங்கல்களும் முற்றாகத் தடைப்பட்டது. இதனால் ஆனந்தபுரம் முற்றாகத் துண்டிக்கப்பட்டு, பாரிய படையால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டது.
தனது தோழர்கள் சிக்கியுள்ளதை அறிந்த, கடற்புலிகளின் தளபதி திரு.சூசை அவர்கள் உடனடியாக வலைஞர்மடம் என்னும் இடத்தில் இருந்து படகுகளில் ஆயுதங்களையும் சில ஆளணிகளையும் உடனே அனுப்பிவைத்தார். இப்படகுகள் பட்டையடி என்னும் இடத்தில் தரையிறங்கி சண்டையிட்டு, ஒரு உடைப்பை ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டது. இப்படகுகளை மோப்பம் பிடித்த இலங்கை கடற்படையினர் அவை தரைக்குச் செல்லாமல் பாரிய தாக்குதலை தொடுத்தனர். இதனால் இத் திட்டம் தோல்வியடைய, 120போராளிகளை ஏற்கனவே காயப்பட்ட லோரன்ஸ் தலைமையில் அனுப்ப முவுசெய்யப்பட்டது. விடுதலைப் புலிகள் ஒருபோதும், தமது போராளிகளையோ, இல்லை மூத்த தளபதிகளஒயோ விட்டுவிட்டு நகர்ந்துசெல்வது இல்லை. எப்படியான தாக்குதல் நடந்தாலும் சிக்கியுள்ள போராளிகளைக் காப்பாற்றவே அவர்கள் முனைவார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.
இவ்வாறு சென்ற 120 பொராளிகளையும் குறிவைத்து, இலங்கை இராணுவம் பாரிய நசகார ஆயுதங்களைப் பாவித்துள்ளது. இதனால் 2 பஸ் மற்றும் ஒரு டிரக் வண்டி உட்பட 3 வாகனங்கள் மீது இலங்கை இராணுவம் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளது. தாக்குதல் நடத்த பாவிக்கப்பட்ட ஆயுதங்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என்று கூறப்படுகிறது. புலிகள் சென்ற வாகனங்கள் சில நிமிடங்களில் எரிந்து ஒரு காஸ் சிலிண்டர் அளவுக்கு சுருங்கிவிட்டதாக, நேரில் பார்த்த போராளி ஒருவர் தெரிவித்தார். இத் தாக்குதலில் இருந்து தப்பித்த சில விடுதலைப் புலிகள் உறுப்பினர்களும் தளபதி லோரன்சும் பின்னர் புலிகள் இருப்பிடம் ஒன்றுக்கு பாதுகாப்பாகச் சென்றுள்ளனர்.
3 நாட்கள் நீர் ஆகாரம் இன்றி, சுற்றிவளைப்பு தாக்குதலை உடைக்க புலிகள் கடுமையாகப் போராடினார்கள். ஏப்பிரல் 3ம் திகதி கேணல் பாணு தலைமையில் போரிட்ட சில போராளிகள் இராணுவத்தின் முற்றுகையில் உள்ள 1 பகுதியை சற்றும் எதிர்பார்க்காதவகையில் உடைத்தனர். இதனூடாக அவர்கள் வெளியேற முடியும் என்ற நிலை தோன்றியது. ஆனால் சில நிமிடங்களில், அவ்விடத்துக்கு இலங்கை இராணுவம் மீண்டும் படையணிகளை அனுப்பி அந்த இடைவெளியை நிரப்பிவிடும் அபாயம் அப்போது இருந்தது. அப்போது பாணு காயப்பட்டு இருந்தார். அவருக்கு சற்றுத் தொலைவில், போரிட்டுக்கொண்டு இருந்த பிரிகேடியர் தீபனை தொடர்புகொண்டு தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். பிரிகேடியர் தீபன் தப்பிச் செல்ல அது நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. ஆனால் தீபன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தன்னை நம்பியுள்ள போராளிகளையும், மற்றைய தளபதிகளையும் விட்டு விட்டு தான் மட்டும் தப்பிச் செல்ல விரும்பவில்லை என அவர் திட்ட வட்டமாகத் தெரிவித்துவிட்டார்.
அப்போது காயப்பட்டு இருந்த தீபனை, தான் தன் கைகளால் தூக்கிக்கொண்டாவது, செல்கிறேன் என்னோடு வாருங்கள் என பாணு கெஞ்சிக் கேட்டுள்ளார். அதனையும் தீபன் மறுத்துவிடார். நான் வெளியேறவேண்டும் என்றால், என்னோடு வந்த அனைத்து போராளிகளும் பாதுகாப்பாக வெளியேறினால் தான் நானும் வெளியேறுவேன். இல்லை என்றால் அவர்களை இங்கே விட்டு விட்டு நான் மட்டும் தப்பிக்க மாட்டேன் என அவர் திட்டவட்டமாக இன்னும் ஒரு முறை அழுத்தி கூறிவிட்டார். எத்தனையோ போர்களை நாம் புராணத்தில் படித்திருப்போம். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அவை நடந்ததாக எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவை உண்மையில் அவ்வாறு தான் நடந்ததா என்று எவருக்குமே தெரியாது. ஆனால் இங்கே ஆனந்தபுரத்தில் நடந்த போர் கண்கூடாகப் பார்த்த ஒன்று. இவன் அல்லவோ வீரன், தமிழ் மறவன் என்று சொல்லும் அளவு இப் போர் இடம்பெற்றது என்பதனை எவரும் எக்காலத்திலும் மறுக்க முடியாது. இலங்கை அரசின் கால்களை நக்கிப் பிழைக்கும் பிழைப்புகள், புலிகள் என்ற வார்த்தையைக் கூடச் சொல்ல அறுகதை அற்றவர்கள் ! கருணா முதற்கொண்டு, டக்ளஸ் வரை உயிருக்காகப் பயந்து ஈனப் பிறவிகளாக வாழ்ந்து வருகின்றனர். தமிழன் என்றால் இவர்கள் தான் என்ற இலக்கணத்தை தந்தவர்கள் விடுதலைப் புலிகள்.
தீபன் களத்தை விட்டு வர மறுப்பதாக பிறிதொரு இடத்தில் நின்ற பொட்டம்மானுக்கு, தளபதி பாணு அறிவித்தார். பிரிகேடியர் தீபனின் வாக்கி டோக்கியின் குறியீடு "டங்கோ பாப்பா" ஆகும். அப்போது இலங்கை இராணுவத்தினர் இதனை ஒட்டுக்கேட்க்கின்றனர். பிரிகேடியர் தீபன் தான் நேசித்த புலிகள் அமைப்பின் மீது எவ்வளவு பற்றுக்கொண்டவர், தமது சக போராளிகளை விட்டு அவர் விலகிச் செல்லவில்லை என்பதனை நினைத்து மெய்சிலித்துப்போனார்கள் என்கிறார், சம்பவ இடத்தில் நின்ற இராணுவச் சிப்பாய் ஒருவர். இதேவேளை புலிகளின் பெண்போராளித் தளபதிகளில் ஒருவரான கேணல் விதுஷா அவர்கள், பொட்டுஅம்மானை வாக்கி டோக்கி மூலம் தொடர்புகொண்டு தமக்கு ஆயுத தளபாடங்களையும் ஆளணிகளையும் அனுப்புமாறு கோரியிருக்கிறார். இதனையும் இராணுவம் ஒட்டுக்கேட்கிறது.
என்னாலான எல்லா முயற்சிகளையும் நான் மேற்கொண்டு விட்டேன், என்னுடைய எல்லா முயற்சியும் தோல்வியில் தான் முடிவந்துவிட்டது. எங்களால் பின்புறமாக இருந்து இராணுவத்தின் சுற்றிவளைப்பை உடைக்க முடியவில்லை, நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை எனப் பொட்டு அம்மான் கூறியுள்ளார். சிக்கியுள்ள புலிகளின் உறுப்பினர்களைக் காப்பாற்ற அதீத நடவடிக்கைகளை மேற்கொண்டவர் பொட்டம்மான். சக்திக்கு மீறிச் செயல்பட்டு ஆளணிகளை அனுப்பி சிக்கியுள்ள அனைவரையும் மீட்க அவர் அரும்பாடுபட்டவர். எதுவும் கைகூடாத நிலையில், பல தாக்குதல் வியூகங்களை 25 ஆண்டுகளாக வகுத்த பொட்டம்மான் கண் கலங்கும்போதே, விதுஷாவுக்கு கள நிலைமைகள் நன்கு புரிந்திருக்கும். ஆனால் கையில் ஆயுதங்கள் இருக்கும்வரை போராடுவோம் என்பதில் இருந்து விதுஷாவோ, துர்க்காவோ இல்லை மற்றைய பெண் போராளிகளோ சற்றும் பின்வாங்கவில்லை !
பிரிகேடியர் தீபன் தலைமையிலான படையணியினர், தளபதி விதுஷா, துர்க்கா போன்றவர்களோடு இணைந்து பாரிய எதிர் தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர். அவர்களிடம் உணவோ இல்லை மருந்துப் பொருட்களோ தேவையான அளவு இருக்கவில்லை. காயப்பட்டு இருந்தாலும் தீபன் தாக்குதல்களை நெறிப்படுத்திய வண்ணம் இருந்தார். இதனைக் கண்டு இராணுவம் அசந்துபோனது. இம் முற்றுகையின்போது ஒலிபெருக்கி மூலம் இராணுவம் ஒரு கோரிக்கையை விடுத்தது. அதாவது சரணடைய எண்ணும் போராளிகள் சரணடையலாம் எனத் தமிழில் கூறப்பட்டது. இருப்பினும் சில உறுப்பினர்களைத் தவிர எவரும் சென்று சரணடையவில்லை. புலிகளின் கொள்கைகளுக்கு அமைய சரணடைவதை விட போராடிச் சாவதே மேல் என்று, இம் மறவர்கள் கருதினார்கள்.
ஆனால் April 3ம் திகதி இரவு 12 மணியோடு, இலங்கை இராணுவம் தாம் போரிட்ட முறையை முற்றாக மாற்றியது. ஆனந்தபுர சுற்றிவளைப்புக்கு உள்ளே இராணுவம் முன்னேற முன்னேற பெரும் தாக்குதலுக்கு முகம்கொடுக்க நேர்ந்தது. பல இராணுவத்தினர் உயிரிழந்தனர். இதனைக் கருத்திற்கொண்ட இராணுவத்தினர் 3ம் திகதி இரவு 12.00 மணியளவில், தாக்குதல் வியூகங்களை மாற்றினார்கள். விமான மூலமாகவும், அப்பாச்சிரக உலங்கு வானூர்திமூலமாகவும் மற்றும் எறிகணைகள் மூலமாகவும் தாக்குதல் நடத்த இராணுவம் திட்டமிட்டது. இதனை அடுத்து அவர்கள் தாம் முற்றுகை இட்ட இடத்தில் இருந்து பின்நோக்கி நகர்ந்தனர். சில மணி நேரங்களில் எல்லாம் பாரிய எறிகணைத் தாக்குதல் அவ்விடத்தில் நடத்தப்பட்டது. துல்லியமாக இடத்தைக் கணித்து பளை மற்றும் ஓமந்தைப் பகுதியில் இருந்து பாரிய எறிகணைத் தாக்குதல் ஆரம்பமானது. அன்றைய இரவு மட்டும் சுமார் 30,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எறிகணைகள் குறிப்பிட்ட அவ்விடத்தின் மீது விழ்ந்து வெடித்தது.போதாக்குறைக்கு அவ்விடத்தின் மீது இலங்கை வீமானப்படைக்குச் சொந்தமான கிபீர் விமானங்களும், அப்பாச்சி ரக உலங்குவானூர்திகளும் தாக்குதல் நடத்தியது. மூச்சை திணறவைக்கும், குண்டுகளும், பாஸ்பரஸ் குண்டுகளும், மற்றும் தடைசெய்யப்பட்ட குண்டுகள் எனப் பேரழிவுகளை ஏற்படுத்தும் பல ஆயுதங்களை இலங்கை இராணுவம் பாவித்தது. சுமார் 2 கிலோ மீட்டருக்கு 2 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பளவிற்குள் இந்த அனைத்து தாக்குதல்களும் இடம்பெற்றது. தொடர்ச்சியாக நடைபெற்ற 2 நாள் தாக்குதல் 5ம் திகதி ஞாயிற்றுக்கிழமை முடிவுக்கு வந்தது. சுற்றிவளைக்கப்பட்ட அப்பகுதியில் இருந்து ஒரு சிறிய எதிர்ப்புக் கூட இல்லை. ஒரு சிறிய துப்பாக்கிப் பிரயோகம் கூட அங்கே இருக்கவில்லை. இராணுவத்தினர் அப்பகுதிக்கு மெல்ல மெல்ல நகர்ந்தனர். அங்கே உடலங்கள் தான் குவியல் குவியலாகக் காணப்பட்டது. தாம் 628 உடலங்களைக் கைப்பற்றியதாக இராணுவம் அறிவித்தது. இங்கே உயிருக்காகப் போராடிக்கொண்டு இருந்த சில மூத்த உறுப்பினர்களை இலங்கை இராணுவம் கைதுசெய்து சென்றுள்ளனர். அவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பெயர் பின்வருமாறு:
கடாபி
ராதா வான்காப்பு படைப்பிரிவின் உப தளபதி அன்பு
பென்னம்மான் கண்ணிவெடிப் பிரிவின் தலைவர் அஸ்மின்
ஆகியோர் இலங்கை இராணுவத்தால் உயிரோடு பிடிக்கப்பட்டனர். இதுவரை இவர்களுக்கு என்ன ஆனது எனத் தெரியவில்லை. அத்தோடு மேலும் 20 போராளிகளும், 3 பெண் போராளிகளும் உயிரோடு பிடிபட்டனர் என்கிறது இராணுவம். கண்டெடுக்கப்பட்ட 628 உடலங்களில், தாம் 60 பேரையே அடையாளம் காணக்கூடியதாக இருந்ததாகத் தெரிவித்துள்ள இராணுவம், அதில் பலர் சயனைட் வில்லைகளை அருந்தியே இறந்து கிடந்தனர் என்றும் தெரிவித்துள்ளனர். பிரிகேடியர் தீபன் அவர்களின் வாக்கி டோக்கி குறியீடான டங்கோ பாப்பாவின் ரேடியோவில் இருந்து எப்போது ஒலிபரப்புகள் தடைப்பட்டதோ அப்போதே இராணுவத்தினர் தமது தாக்குதல்களை நிறுத்தினர். இதன் பின்னரே ஆனாந்தபுரம் நோக்கி அவர்கள் திரும்பவும் நகர ஆரம்பித்தனர். சிங்கள இராணுவத்திற்கு அவ்வளவு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் பிரிகேடியர் தீபன்.
தம்மிடம் அகப்பட்ட பல புலிகள் உறுப்பினர்களை, தரக்குறைவாக நடத்தி பல படுகொலைகளைச் செய்தது இலங்கை இராணுவம். பெண் போராளிகளின் உடலங்களைக் கூட அவர்கள் விட்டுவைக்கவில்லை. இறந்த புலிகள் உறுப்பினர்களின் உடலங்களை மானபந்தப் படுத்தினர். இவை அனைத்தையும் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், சிலவற்றை வீடியோவில் பார்த்தும் இருக்கிறோம். சிங்கள இராணுவம் ஆனந்தபுரத்தை நெருங்கியவேளை, பிரிகேடியர் தீபன் அவர்கள் இறந்திருந்தார். அவர் உடலை மரியாதையாகத் தூக்கிச் செல்லுமாறு ஒரு கட்டளைத் தளபதி இராணுவத்துக்கு பணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வளவு கொடுமை புரிந்த சிங்கள இராணுவம் பிரிகேடியர் தீபன் மீது வைத்திருந்த மரியாதை அது. படையெடுத்துச் சென்று அவர்களோடு போரிட்டு வெல்ல முடியாது என்பதால், அவ்விடதிற்கு ஏவுகணை மழை பொழிந்து, அனைத்துப் போராளிகளையும் தாம் பேடித்தனமாகக் கொன்றோம் என்பதனை அவர்களால் என்றும் மறக்கமுடியாது.
அதேவேளை எப்படியான தாக்குதல் வந்தாலும், நிலைகுலையாது, மண்டியிடாத மன வலிமையோடு போரிட்டு சாவினை கட்டி அணைத்த மாவிரர்களை தமிழர்கள் என்றும் மறக்க மாட்டார்கள். இவர்கள் அல்லாவா வரலாற்று நாயகர்கள். வன்னி யுத்தத்தில் பல பாகங்கள் இதுபோன்ற பல உக்கிர சமர் இடம்பெற்றது. ஆனால் ஆனந்தபுரச் சமர் நமக்குத் தெரிந்திருந்திருப்பதால் அதனை எழுதுகிறோம். ஆனால் தெரியாமல் நடந்த சமர்கள் பல உள்ளன, அவை இன்னும் வெளியே வராத புதிராகவே உள்ளது. விடுதலைப் புலிகளும் அதன் தளபதிகள் மற்றும் போராளிகள், ஒரு உறுதியோடு ஒரு லட்சியத்தோடு இறுதிவரை போராடினார்கள். அந்த லட்சியத்தை புலம்பெயர் தமிழர்களும் இளையோர்களும் இனிக் கையில் எடுப்பார்களா ? வேற்றுமைகளைக் களைந்து இந்த மறவர்களை மனதில் நிறுத்திச் செயல்படுவார்களா ?
-வல்லிபுரத்தான் அதிர்வு -இணையத்தில் இருந்து மீள் பதிவு
_____________________________________________________________________________________________