ஊழலாட்சியும்-திண்டாட்டமும்,,,

-எஸ்.ஏ.பெருமாள்
அண்மையில் லிட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியதோடு பெட்ரோல் விலை கடந்த ஓராண்டு காலத்தில் லிட்டருக்கு 20 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி “இது எண்ணெய் நிறுவனங்களின் முடிவு, எங்களுக்குச் சம்பந்தமில்லை” என்று உளறுகிறார். அடுத்து வரும் ஏதோ ஒருநாள் நள்ளிரவில் டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலையும் உயர்த்தப்படப் போவதாய் அறிவித்துள்ளார். மக்கள் மீது பெரும் தாக்குதல் தொடுக்க மத்திய அரசு கத்தியைத் தீட்டுகிறது.

சோனியா காந்தியின் வழிகாட்டலில் மத்திய அரசில் ஊழல்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் கொள்ளையடிக்கப்படுகிறது. ரிலையன்ஸ், டாட்டா, ஜின்டால், வேதாந்தா, மித்தல் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கையாளாகச் செயல்படுகிறது மத்திய அரசு. இப்போது உரவிலையை உயர்த்தி விவசாயிகளின் வாழ்வைச் சூறையாடுகிறது.

உலக வங்கியின் தாளத்திற்கு ஏற்ப பிரதமர் மன்மோகன்சிங் காங்கிரஸ் தலைவரின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். இதனால் இமாலய ஊழல்கள் தெரிந்தும்கூட எதுவுமே நடக்கவில்லை என்கிறார். அம்பானியின் நிர்வாகத்தில் பணியாற்றிய முரளி தியோராதான் இன்றைய பெட்ரோலிய அமைச்சர். இவர் முன்மொழிந்து தான் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் அதிகாரம் மத்திய அரசால் வழங்கப்பட்டது. சோனியாவின் ஆதரவால் இது நடந்தது. டீசல், கேஸ் விலையையும் நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் எண்ணெய் நிறுவனங்களுக்கே வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது.

எண்ணெய் நிறுவனங்களில் கணிசமான பகுதி அம்பானிகள் கையில் (ரிலையன்ஸ்) உள்ளது. விலைஉயர்வால் கொள்ளை லாபம் அடிப்பவர்கள் அம்பானிகள் தான்.

உரமும் கொள்ளை

விவசாயத்துக்குத் தேவையான யூரியா, சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ், டிஏபி, சல்பேட் ஆகிய உரங்களின் விலைகள் கடந்த ஏப்ரல் 1க்குப் பிறகு 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் உரத்துக்கு மானியம் வழங்கியதால் உரங்களின் விலையை மத்திய அரசே நிர்ணயித்து வந்தது. நம்நாட்டில் ஸ்பிக், மங்களா, நாகார்ஜூனா, ஆர்.சி.பி. விஜய் போன்ற பத்துக்கும் மேற்பட்ட பெரிய உரக்கம்பெனிகள் உள்ளன. இந்த உர உற்பத்திக்கு ஆகும் கூடுதல் செலவை மத்திய அரசு மானியமாக உரக் கம்பெனிகளுக்கு வழங்கி வந்தது.

ஆண்டுக்கு இரண்டரை லட்சம் கோடி டன்கள் ரசாயன உரம் நம்நாட்டு விவசாயிகளின் தேவை ஆகும். இதற்கு மானியமாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் ஆலோசனையின் பேரில் மத்திய அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்தது. விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களின் விலையை இனிமேல் மத்திய அரசு நிர்ணயிக்காது. உரவிலையை இனி கம்பெனிகளே நிர்ணயிக்கும் உரக்கம்பெனிகளுக்கு நிலையான மானியத்தை மத்திய அரசு நிர்ணயித்து அளிக்கும். இது கடந்த மாதம் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதனால் கடிவாளமில்லாத குதிரை போல் உரக்கம்பெனிகள் கடந்த ஒரு மாத காலமாய் தாவிக் குதிக்கின்றன. உரத்தின் விலை 40 சதவீதத்துக்கு மேல் எகிறிவிட்டது. இன்னும் ஒரு வருடம் கழித்து விவசாயிகளின் நில அளவுக்கேற்ப, பயிரிட்டுள்ள பயிருக்கேற்ப வேளாண்மைத் துறையின் பரிந்துரைக்கேற்ப மட்டுமே விவசாயிகளுக்கு ரேசன் முறையில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த முறையில் மானிய வழங்களில் பெருமளவு ஊழலில் அமைச்சர்கள் ஈடுபட வாய்ப்புண்டு என்றும் கூறப்படுகிறது.

இந்தப் புதிய நடைமுறையைக் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எந்த ஒரு விவசாய அமைப்பையும் கலந்து ஆலோசிக்கவில்லை. இது பிரணாப் முகர்ஜி, மன்மோகன் சிங், சோனியா காந்தி ஆகியோர் எடுத்த முடிவு என்றும், விவசாய அமைச்சர் சரத்பவாருக்கோ, உரத்துறை அமைச்சர் அழகிரிக்கோ கூடத் தெரியாது என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய்கள் வரிச் சலுகையை நிதியமைச்சர் வாரி வழங்கியுள்ளார். ஆனால் 75 கோடி விவசாயிகளை நிர்க்கதியாக்கி விட்டார். இந்த முடிவுகள் விவசாயிகளை அழிக்கும். ஏற்கெனவே தற்கொலைகள் நடக்கும் நம்நாட்டில் விவசாயிகளின் தற்கொலைகள் பெருகும்.

வரலாறு காணாத ஊழல்களில் ஈடுபட்டு வரும் மத்திய அரசு மக்களின் வாழ்வை பெட்ரோல், உரவிலையை உயர்த்திச் சூறையாடுகிறது. இனி டீசல், கேஸ், மண்ணெண்ணெய் விலை உயர்த்தப்பட்டால் அதோ கதிதான். அமைச்சர்களின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள் உயரும். விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தர மக்களின் வாழ்க்கை தகரும்.
நன்றி:தீக்கதிர்.
==============================================================================================================
கிரிமினாமுல் காங்கிரஸ்
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் குற்றப்பின்னணி உள்ள எம்.எல்.ஏ.க்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரிவந்துள்ளது.
தேர்தல் கண்காணிப்பகம் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிப்லாப்ஹலீம் நிருபர்களிடம் ‌தெரிவித்ததாவது: மேற்குவங்கத்தி்ற்கு கடந்த மாதம் 6 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. மொத்தம் 294 எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதில் 102 குற்றப்பின்னணி உள்ள எம்.எல்.ஏ.க்களில் 75 எம்.எல்.ஏ.க்கள் மீது கொலை, கொலை முயற்சி, ஆடகடத்தல் உள்ளிட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த 74 குற்ற பின்னணி எம்.எல்.ஏ.க்களில் 69 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலும், 69 பேரில் 51 பேர் மீது கொலை, கொலை முயற்சி, ஆட்கடத்தல் வழக்குகள் உள்ளன.
காங்கிரஸ் கட்சியின் 17 பேர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் எனவும் இவர்களில் 11 பேர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மீதமுள்ளவர்கள் பார்வர்டுபிளாக், புரட்சிகர சோஷியலிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள். மொத்தம் மூன்றில் ஒரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் குற்றப்பின்னணி கொண்டவர்கள்.இது 35 சதவீதம் ஆகும்.இதே போன்று திரிணாகமுல் காங்கிரஸ் கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 184 எம்.எல்.ஏ.க்களில் 33 பேர் கோடீஸ்வரர்கள், இடது சாரி கட்சியைச் சேர்ந்த எம்.எல்..ஏ.க்கள் யாரும் கோடீஸ்வரர்கள் இல்லை எனவும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இவர்கள் நடத்தும் ஆட்சி எப்படியிருக்கும்.வாக்களித்தமக்கள் பாவம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?