அம்பானிக்கு ஆதரவாக ராகுல்.....



ஒரிசாவில் உள்ள நியமகிரி மலைப் பகுதியில் பாக்சைட் தோண்டுவதற்கு வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி மறுத்திருக்கிறது. இது கோந்த் பழங்குடிகள், சூழலியல் ஆர்வலர்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. ஆனால் உண்மை நிலைமை பற்றி ஆராயும்போது மூன்று விஷயங்கள் கவனத்துக்கு வருகின்றன. மத்திய அரசு எதற்காக இதைச் செய்தது? மாநில அரசு யார் பக்கம் நிற்கிறது என்பது மிக முக்கியமான கேள்விகள். அதற்கான விடைதேட ஒரு முயற்சி:
காலஹண்டி மாவட்டம் லாஞ்சிகர் வட்டத்தில் உள்ள உஜீர்பா கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஒரு குடிசையில் பழங்குடி குழு ஒன்றிடம் அவர் குறைகளை கேட்டறிகிறார். பிறகு அவர்களுடன் உணவருந்திவிட்டுச் சொல்கிறார் "உங்கள் கோரிக்கைகளை கேட்டிருக்கிறேன். உங்களது போராட்டம் எனது போராட்டமும்கூட. நான் பழங்குடிகளின் போர்வீரன். உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்படும்" என்று கூறிச் செல்கிறார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸின் "வருங்காலத் தலைவர்" ராகுல் காந்தி பழங்குடி களுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றியதாக பேசப்படுகிறது.  நியமகிரி மலைப்பகுதியில் ஸ்டெர் லைட், ஒரிசா சுரங்கக் கழகம் ஆகியவற்றின் பாக் சைட் சுரங்கம் தோண்டும் திட்டத்துக்கு காடுகளை அகற்றுவதற்கான இரண்டாம் நிலை அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நிராகரித்துள்ளது. அத்துடன் 10 லட்சம் டன் அலுமினிய உற்பத்தித் திறன் கொண்ட லாஞ்சிகரில் வேதாந்தா ரிசோர்சஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்று விளக்கம் கேட்டதுடன், அங்கீகாரமில்லாமல் அந்தத் தொழிற்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டதும் கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
இந்த விவகாரத்தில் உலக அளவில் உலோகம், சுரங்கத் தொழிலில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேதாந்தா நிறுவனம் தொடர்ச்சியாக முன்னுக்குப் பின் முரணாக பேசி வந்துள்ளது. ஒரிசாவில் நியமகிரி மலை அடிவாரத்தின் லாஞ்சிகர் நகரிலுள்ள அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கும் நியமகிரியில் பாக்சைட் தோண்டுவதற்கும் தொடர்பில்லை என்று கூற அந்நிறுவனம் முதலில் முயற்சித்தது. பிறகு அப்பகுதியின் வளர்ச்சிக்கு தான் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, சுரங்கம் தோண்ட அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வாதாடியது. ஆனால் அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கோரும் விண்ணப்பத்தில், சுரங்கம் தோண்டுதல் பற்றி ஒரு வார்த்தைகூட கூறப்பட்டிருக் கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே 2006ஆம் ஆண்டில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சுத்திகரிப்பு ஆலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. நியமகிரியில் சுரங்கம் தோண்ட அனுமதி வழங்கப்படவில்லை. இருந்தபோதும் 2007ஆம் ஆண்டில் சுத்திகரிப்பு ஆலையை முழுமையான செயல்பாட்டு நிலைக்குக் கொண்டு வந்தது வேதாந்தா. இந்த ஆலைக்கு ஜார்கண்ட், சத்தீஸ்கர், குஜராத், தமிழகத்தில் இருந்து பாக்சைட் எடுத்து வரப்பட்டது.
2007ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுத்திகரிப்பு ஆலையை ஆறு மடங்கு விரிவுபடுத்த அனுமதி வேண்டும் என்றும், இதன் மூலம் ஆண்டுக்கு 60 லட்சம் டன் அலுமினியம் உற்பத்தி செய்யப்படும் என்றும் வேதாந்தா அலுமினா நிறுவனம் தெரிவித்தது. சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலேயே விரிவாக்கத்தைத் தொடங்கியது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை மீறியசெயல் என்று மத்திய அரசு அமைத்த என்.சி. சக்சேனா குழு சுட்டிக்காட்டியுள்ளது. இந்த மாபெரும் நவீன விரிவாக்கம் என்பது, சட்டத்தை முற்றிலும் மதிக்காத செயலையே காட்டுகிறது. வனஉரிமைச் சட்டம், வனப் பாதுகாப்புச் சட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம், பஞ்சாயத்து ஷெட்யூல்டு பகுதி விரிவாக்கச் சட்டம் ஆகியவற்றை வேதாந்தா நிறுவனம் மீறியுள்ளது. இதற்கு மாநில அரசு உதவியுள்ளது என்று என்.சி. சக்சேனா கமிட்டி குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆனால் 1,400 பேர் கொண்ட டோங்க்ரியா கோந்த், சில நூறு பேர் கொண்ட குடியா கோந்த் பழங்குடிகளின் வாழ்வாதாரமாகவும் அவர்களது வாழ்வின் மையமாகவும் நியமகிரி மலைப்பகுதிகள் காலங்காலமாக இருந்து வருகின்றன. இந்த மலையை புனிதமாகக் கருதும் நியமகிரி பழங் குடிகள், சக்சேனா குழு அமைக்கப்படுவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களது போராட்டம் "அவதார்" படத்தில் வரும் நாவி பழங்குடிகளின் போராட்டத்தை ஒத்தது. சர்வதேச தொழில்மயத்துக்கு எதிரானது.
நிலைமை இப்படி இருக்கையில், பிரிட்டனை மையமாகக் கொண்ட வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் ரூ. 8,000 கோடி மதிப்புடைய அலுமினிய திட்டத்துக்கு என்.சி.சக்சேனா குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆகஸ்ட் மாதம் தடை விதித்தது.
2008ஆம் ஆண்டு நாடாளுமன்றம் - மாநிலத் தேர்தலுக்கு முன்னர் இப்பகுதிக்குச் சென்றிருந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாக்சைட் சுரங்கத்தை தடுத்து நிறுத்துவதாக டோங்க்ரியா கோந்த் பழங்குடிகளிடம் வாக்களித்துச் சென்றார். அதற்கு இரண்டு ஆண்டுகள் கழித்தே இந்தத் திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்பொழுது மீண்டும் காலஹண்டிக்குத் திரும்பிய காங்கிரசின் காந்தி வாரிசு தனது வீரத்தை பறைசாற்றிக் கொண்டார். தன்னைத் தானே "பழங்குடி போராளி" என்றும் முன்நிறுத்தி பேசிச் சென்றுள்ளார். நவீன் பட்நாயக்கின் ஒரிசா அரசுக்கு எதிராக காங்கிரஸ் தொடுத்துள்ள இந்த ஆயுதம், அப்பட்டமான அரசியல் நாடகம் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.
ஏழைகளை காங்கிரஸ் பக்கம் ஈர்க்கும் ராகுல் காந்தியின் திட்டமாகவும் இது பார்க்கப்படுகிறது. பழைய காலத்தைப் போல தலித், பழங்குடிகளின் வாக்குகளை அறுவடை செய்ய காங்கிரஸ் விரும்புகிறது. அதன்காரணமாகவே, நாடாளு மன்றத்தில் பட்டினியால் வாடும் கலாவதி போன்ற ஏழை விவசாயிகளைப் பற்றி பேசுவது என்றாலும், கோந்த் பழங்குடிகளைப் பற்றிப் பேசும்போதும் ராகுல் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு  பேசுகிறார்.
ரிலையன்ஸை காப்பாற்றும் காங்கிரஸ் போராட்டம்?
நியமகிரி மலையில் பாக்சைட் தோண்டுவதற்கு எதிராக கோந்த் பழங்குடிகள் 7 ஆண்டுகளுக்கு மேல் போராடி வரும் நிலையிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக போராட்டத்தை வலுப்படுத்தியிருந்த நிலையில் பாக்சைட் தோண்டுவதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திடீரென தடை விதித்திருப்பது ஏன் என்ற கேள்விக்கு ஒரு பகுதி விடைதான் மேலே கூறப்பட்டிருக்கிறது. மீதியை கீழே படியுங்கள்.
வேதாந்தா நிறுவனம் கெய்ர்ன் இந்தியாவை ரூ. 45,000 கோடி தொகைக்கு வாங்கியுள்ள நிலையில், அது ஏற்கெனவே வைத்துள்ள ஸ்டெர்லைட் எனர்ஜி பங்குகளையும் சேர்த்தால் மொத்த மதிப்பு ரூ. 1,67,000 கோடி, இது முகேஷ் அம்பானியின் நிறுவனங்களின் மதிப்பைத் தாண்டி விடுகிறது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைவிட பெரிதாக வேதாந்தா நிறுவனம் வளர்ந்து வருவதை தடுப்பதற்காகவே நியமகிரியில் பாக்சைட் தோண்டத் தடை விதிக்கப்பட்டது என்கின்றன அரசு வட்டாரங்கள். இதை நிரூபிக்கும் வகையில் கெய்ர்ன் இந்தியா என்ற பெட்ரோலிய நிறுவனத்தின் பெருமளவு பங்குகளை வாங்குவதாக வேதாந்தா அறிவித்த நாள் அன்றே, நியமகிரியில் பாக்சைட் தோண்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறதா என்று இதழாளர்கள் கேட்டபோது, வேதாந்தா நிறுவனம் கெய்ர்ன் நிறுவனத்தை வாங்கியிருப்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது என்று சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியது மிகப்பெரிய நகைச்சுவை.
உலகின் மிகப் பெரிய கனிம நிறுவனமான வேதாந்தா, கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தை வாங்கியதன் மூலம் பெட்ரோலியத் துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆதிக்கம் ஆட்டம் காணலாம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். இன்றைய நிலையில் அரசின் எண்ணெய், இயற்கை எரிவாயு கழகத்துக்குப் பிறகு, ரிலையன்ஸ் நிறுவனமே பெட்ரோலியத் துறையில் மிகப் பெரிய நிறுவனமாக இருக்கிறது. இந்தியாவில் மிக அதிகமாக பெட்ரோலியம் எடுக்கும் தனியார் துறை நிறுவனமாகவும் அது இருக்கிறது. ஒ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு 500 கோடி பேரல் எண்ணெயும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு 250 கோடி பேரல் எண்ணெயும் கையிருப்பு இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. புதிதாக வேதாந்தா நிறுவனம் நுழைந்திருப்பதன் மூலம் அதன் கட்டுப்பாட்டில் 100 கோடி பேரல் எண்ணெய் சென்றுவிடலாம். உண்மையில், இந்திய எண்ணெய், குஜராத் மாநில பெட்ரோலிய கழகத்துக்கு அடுத்தபடியாக கெய்ர்ன் இந்தியா நிறுவனத்திடமே மிகப்பெரிய எண்ணெய் வயல் இருக்கிறது.
வழக்கமாக எந்தத் துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் ஏகபோகம் செலுத்தவே ரிலையன்ஸ் முயற்சிக்கும். இப்போது பெட்ரோலியத் துறையில் அதற்குப் போட்டியாக மிகப் பெரிய நிறுவனமான வேதாந்தா இறங்கியுள்ளது. இதனால் வேதாந்தாவுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையிலேயே நியமகிரியில் பாக்சைட் தோண்ட தடை விதிக்கப்பட்டது என்றும் சூழலியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காங்கிரஸ் ஆட்சி மக்கள் போராட்டத்துக்கு செவி சாய்த்திருந்தால், அங்கு கனிமம் தோண்ட தொடக்கத்திலேயே அனுமதி அளித்திருக்கக் கூடாது. இவ்வளவு தாமதமாக வேதாந்தா நிறுவனம் தடை செய்யப்படுவதன் பின்னணியை ஆராய வேண்டியது மிக முக்கியம் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். வேதாந்தா நிறுவனத்தின் ஒரு பிரிவாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகளாக வழக்கு நடந்து வரும் நிலையிலும், சமீபத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் அந்த நிறுவனத்தின் செயல்பாடு சுற்றுச்சூழலை சீர்கெடுக்கிறது என்று கூறி, அந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இவ்வளவு தாமதமாக இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு உள்ள பின்னணி பற்றியும் ஆராய வேண்டும் என்பது சூழலியலாளர்களின் கோரிக்கை.
பழங்குடிகளின் மீது அடக்குமுறை
வேதாந்தா சுரங்கம் தோண்ட அனுமதி மறுக்கப் படும் அறிவிப்பு வருவதற்கு முந்தைய நாள், பதறிப் போன ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக், அவசரஅவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்கை சென்று சந்தித்தார். மிக முக்கியமான மக்கள் பிரச்சினை அல்லவா! அதே நவீன் பட்நாயக், வேதாந்தாவுக்கு தடை விதிக்கப்படுவதற்கு முந்தைய மாதம், அந்த நிறுவனத்தின் கூலிப்படை போல ஒரிசா காவல்துறையை அனுப்பியது தொடர்பாக ஒரு முக்கியமான சம்பவம் கூறப்படுகிறது. அதைப் பார்ப்போம்: நியமகிரி மலைச்சரிவுகளின் லாக்படார் கிராமத்தைச் சேர்ந்த லடோ மாஜி சிகாகாவை ஆகஸ்ட் 9ந் தேதி திடீரென சிலர் கடத்திச் சென்றனர். சுறுசுறுப்பும் நேரடியாகப் பேசும் தன்மையும் கொண்ட அந்த கோந்த் பழங்குடித் தலைவர், தில்லியில் நடைபெற இருந்த ஒரு கருத்தரங்கில் வனஉரிமைச் சட்டம் தொடர்பாகப் பேசுவதற்காக புறப்பட்டுக் கொண்டிருந்தபோது கடத்தப்பட்டார். நியமகிரி மலையில் கனிமம் தோண்டுவதற்கு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்ததில் அவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. சக்சேனா குழு அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் அவர் கடத்தப்பட்டார். சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கூலிப்படையினரால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று ஆரம்பத்தில் கருதப் பட்டது. ராயகடா, காலஹண்டி மாவட்டங்களில் வேதாந்தா நிறுவனத்தின் பாக்சைட் சுரங்கம், அலுமினிய தொழிற்சாலை போன்றவை இருக்கும் நிலையில், அவர் கடத்தப் பட்டது தொடர்பாக சமூக  செயல் பாட்டாளர்கள் ரகசியமாகக் கூடியே ஆலோசிக்க வேண்டி இருந்தது. ஏனென்றால் அவர்களும் கடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்பிருந்தது. லடோ சிகாகா வாழ்ந்த பகுதியிலும் பதற்றம் பரவியது.
ஆனால் அவரை கடத்திச் சென்றது, சீருடை அணியாத இரண்டு காவல்துறையினர் என்பது இரண்டு நாட்களுக்குப் பின்னர் தெரிய வந்தது. ராயகடா காவல்துறை சிறையில் இரண்டு இரவுகள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட லடோ பிறகு விடுதலை செய்யப்பட்டார். மாவோயிஸ்ட் வருகை தொடர்பாக தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவரிடம் வலிந்து கையெழுத்து பெற்ற பின்பே விடுவிக்கப்பட்டுள்ளார். அவருடன் சேனா சிகாகா என்ற தலைவரும் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
ஒரிசாவில் நடைபெறும் மாற்றங்களை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு லடோ சிகாகா கடத்தப்பட்டது ஆச்சரியமளித்திருக்காது. போராட்டக்காரர்களை மாவோயிஸ்ட் என்றோ, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் என்றோ முத்திரை குத்தி சிறையில் அடைப்பது இங்கு ஒன்றும் புதிதல்ல.
ஆனால் அதேநேரம் காவல்துறையினர் சொல்லும் கருத்துக்கு நேரெதிராக, திரிலோச்சன்பூர் கிராமத்துக்கு வந்த மாவோயிஸ்ட்டுகள் அந்தப் பகுதியினரிடம் "வேதாந்தாவுக்கு எதிராக வேலை செய்யாதீர்கள்" என்று எச்சரித்துவிட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இந்தப் பகுதியில் திடீரென மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவ ஆரம்பித்திருப்பது, போராட்ட இயக்கங்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது. ஏனென்றால் போராட்டக்காரர் களையும் பழங்குடித் தலைவர்களையும் மாவோயிஸ்ட் டுகள் என்ற பெயரில் காவல்துறை போலியாகக் கைது செய்வதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. பாக்சைட் தோண்டுவதற்கு எதிராக டோங்க்ரியா கோந்த் பழங்குடிகளைத் திரட்டிய இடதுசாரிகளே இது பற்றி அதிகம் கவலைப்படுகின்றனர். 
வேதாந்தா சுரங்கம்: கடந்த பாதை
பாக்சைட் வளத்தில் 55 சதவீதம் ஒரிசாவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரிசா நியமகிரியில் வேதாந்தா சுரங்கம் தோண்ட தடை விதிக்கப்பட்ட நிகழ்வுகள் ஒரு பார்வை:
மார்ச் 19, 2003: அலுமினிய சுத்திகரிப்பு ஆலை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி தருமாறு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் ஸ்டெர்லைட் விண்ணப்பிக்கிறது.
மார்ச் 24, 2003: சுரங்கம் தோண்டுவதைப் பொறுத்தே அலுமினிய சுத்திகரிப்பு ஆலை செயல்படும் என்பதால், அலுமினிய சுத்திகரிப்பு ஆலை, சுரங்கம் இரண்டுக்குமான அனுமதியை சேர்த்தே பரிசீலனை செய்யப் போவதாக ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு சுற்றுச் சூழல் அமைச்சகம் எழுதுகிறது.
செப்டம்பர் 22, 2004: அலுமினிய சுத்திகரிப்பு ஆலைத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது.
பிப்ரவரி 28, 2005: காலஹண்டி, ராயகடா மாவட்டங்களில் பாக்சைட் சுரங்கம் தோண்டு வதற்கான முன்மொழிவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு ஒரிசா அரசு அனுப்பியது.
மார்ச் 2, 2005: ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியின் செல்லும்தன்மை பற்றி உச்ச நீதிமன்ற மத்திய அதிகாரக் குழு கேள்வி எழுப்பியது. இது தொடர்பாக குழு பரிசோதனை நடத்தும் வரை காடுகளை அகற்றுவதற்கான அனுமதியை நிறுத்தி வைக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது.
செப்டம்பர் 21, 2005: தொழிற்சாலையில் வனஉரிமைச் சட்டம் மீறப்பட்டுள்ளதால், சுரங்கம் தோண்ட காடுகளை அகற்ற அனுமதி வழங்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்துக்கு மத்திய அதிகாரக் குழு பரிந்துரை செய்கிறது.
செப்டம்பர் 9, 2007: வேதாந்தா சுரங்கம் தோண்டுவதால் ஏற்படும் தாக்கம் பற்றி ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது.
அக்டோபர் 5, 2007: காடுகளை அகற்ற சுற்றுச்சூழல் அமைச்சகம் தற்காலிக அனுமதி வழங்குகிறது.
நவம்பர் 23, 2007: காடுகளை அகற்ற அனுமதிக்க வேண்டுமானால் அதற்கு சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. சுரங்கத் திட்டத் துக்கான செயல்பாடுகள் அனைத்தையும் ஸ்டெர் லைட் அல்லது ஒரிசா சுரங்கக் கழகம் செய்ய வேண்டும். அதேநேரம் இந்தத் திட்டத்தில் வேதாந்தா எந்த வகையிலும் ஈடுபடக் கூடாது என்று நீதிமன்றம் கூறுகிறது.
மார்ச் 7, 2008: ஒரிசாவுக்குச் செல்லும் ராகுல் காந்தி பிஜீ ஜனதா தளத்தின் விவசாயக் கொள்கையை தாக்குகிறார்.
ஆகஸ்ட் 8, 2008: போராட்டங்கள், நிலத் தகராறு காரணமாக தாமதமான ஒரிசாவிலுள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைகள், போஸ்கோ இந்தியா நிறுவனம் ஆகியவற்றின் திட்டங்களைத் தொடங்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பிப்ரவரி 9, 2010: வேதாந்தா சுரங்கத் திட்டத்துக்கு எதிராக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் போராட்டம் நடத்துகிறது.
பிப்ரவரி 25, 2010: கள ஆய்வு செய்த மூன்று நபர் குழு, களத்தில் உள்ள உண்மைகளை ஆராய விரிவான ஆய்வு தேவை என்று பரிந்துரை செய்ததன் பேரில் என்.சி. சக்சேனா தலைமையிலான குழு அமைக்கப்படுகிறது.
மார்ச் 16, 2010: லாஞ்சிகரில் உள்ள தனது அலுமினிய சுத்திகரிப்பு ஆலைக்கு நியமகிரியில் பாக்சைட் தோண்ட வேதாந்தா விரும்புகிறது. ஆனால் பழங்குடிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 13, 2010: கெய்ர்ன் இந்தியாவின் பங்குகளை வேதாந்தா வாங்குகிறது. இதற்கு இந்திய அரசின் ஒப்புதல் தேவை என்கிறது பெட்ரோலிய அமைச்சகம்.
ஆகஸ்ட் 16, 2010: என்.சி. சக்சேனா தலைமையிலான நான்கு நபர் குழு, நியமகிரியில் பாக்சைட் சுரங்கம் தோண்டுவதற்கான அனுமதியை திரும்பப் பெற வேண்டுமென்று பரிந்துரை செய்கிறது. இது பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்கும். வாழ்வாதாரம், பண்பாடு, பொருளாதார நலத்தை பாதிக்கும் என்று காரணம் கூறுகிறது.
ஆகஸ்ட் 20, 2010: வன ஆலோசனைக் குழு கூடுகிறது. வேதாந்தா நிறுவனம் வனஉரிமைச் சட்டம், விதிமுறைகளை மீறியுள்ளதை கண்டுபிடிக்கிறது.
ஆகஸ்ட் 23, 2010: வேதாந்தா நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கிறார் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்.
ஆகஸ்ட் 24, 2010: வேதாந்தா பாக்சைட் சுரங்கம் தோண்டுவதற்கான இரண்டாம் நிலை முன்மொழிவுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவிக்கிறார்.
ஆகஸ்ட் 26, 2010: நியமகிரிக்கு மீண்டும் சென்ற ராகுல் காந்தி “நான் பழங்குடிகளின் வீரன்” என்று சுயபிரகடனம் செய்து கொள்கிறார்.
                                                                                                                                                                                                                                                   நன்றி: பூவுலகு இதழ்,

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?