செந்தில் பாலாஜி

 ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார்.

2014-ஆம் ஆண்டு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொறியாளர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.

2015-ஆம் ஆண்டு தேவசகாயம் என்பவர் அளித்த புகாரின் பேரில் ஏமாற்றுதல், சதி மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  ஆனால் முதல் தகவல் அறிக்கையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பெயர் இடம்பெறவில்லை.இதையடுத்து, பண மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சேர்க்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து, அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் பாலாஜி, அவரது சகோதரர் அசோக்குமார், மைத்துனர் கார்த்திக், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் என 40-க்கும் மேற்பட்டோர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர் மற்றும் மனுதாரர்கள் இடையே சமரசம் ஏற்பட்டுவிட்டதால், செந்தில் பாலாஜி மீதான குற்றவியல் வழக்குகளை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜி மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. 

இதற்கு எதிராக செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.

இதையடுத்து, அமலாக்கத்துறையின் சம்மனை நிறுத்திவைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்,செந்தில் பாலாஜி மீதான முந்தைய வழக்குகளில் புதிதாக விசாரணை நடத்த வேண்டும் ஆணையிட்டது.


இந்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி மற்றும் பாதிக்கப்பட்டோர் தரப்பு என 3 மேல் முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

விசாரணைக்கு அழைத்த சம்மனை ரத்து செய்ததற்கு எதிராக அமலாக்கத்துறையும்,பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி செந்தில் பாலாஜி தரப்பிலும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

காவல்துறை விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதால் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்குகளில் கடந்த மே 16-ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ராமசுப்பிரமணியன் அமர்வு, 2 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடித்து அறிக்கை அளிக்க தமிழ்நாட்டின் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், பணமோசடி வழக்கு தொடர்பாக விசாரிக்க அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது செல்லாது எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையிட்டனர்.

வழக்கு விசாரணையைப் பொறுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைப்பது தொடர்பாக எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களிலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக உத்தரவு வெளியான நிலையில், தற்போது அமலாக்கத்துறை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்தனர். 

இந்த நிலையில் 20 மணி நேர விசாரணைக்குப் பிறகு இன்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் திடீரென கைது செய்தனர்.

மருத்துவ பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அழைத்துச் சென்றனர். 

அமைச்சர் செந்தில் பாலாஜி காரில் மயங்கி நிலையில் இருந்ததால், ஸ்ட்ரெச்சர் மூலம் அமைச்சரை திமுக தொண்டர்கள் மருத்துவமனை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

----------------------------------------------

முதல்வர் பார்வையிட்டார்.

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சரான செந்தில் பாலாஜி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சு வலி ஏற்பட்டு கதறி துடித்தார். 

அதுகுறித்த வீடியோக்கள் செய்திகளில் வெளியாகி பதற்றததை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் அவரது காது பகுதியில் வீக்கம் உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பல அமைச்சர்கள் இன்று அதிகாலை முதல் ஓமந்தூரர் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்தனர். இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளார்

செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு சென்று நலம் விசாரித்தார். 

 மேலும் தார்மீக ஆதரவையும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் ட்விட்டர் பதிவில் செந்தில் பாலாஜியை சந்தித்த புகைப்படம் பகிரப்பட்டுள்ளது உடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியம் உள்ளார். 

முன்னதாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கை:-

தன் வசம் இருக்கும் விசாரணை அதிகார அமைப்புகள் மூலமாக தனக்கு எதிரான அரசியல் சக்திகளை பாஜக பழிவாங்கும். அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி இது மட்டும் தான் என்று நான் ஏற்கனவே சொல்லி இருந்தேன். இது மாதிரியான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்வார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.

அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் நேற்றைய தினம் காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தந்து வந்தார். 

இந்த நிலையில் தேவையில்லாத வகையில்  - அனுமதியின்றிபலவந்தமாக, தமிழ்நாட்டின் பாதுகாப்பு தொடர்பான இரகசிய கோப்பு ஆவணங்கள் நிறைந்த தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அறைக்குள் நுழைந்து, விசாரணை என்ற பெயரால் நாடகம் நடத்தி நேரத்தை கடத்தி இருக்கிறார்கள். தலைமைச் செயலகத்திலேயே புகுந்து ரெய்டு நடத்துவோம் என்று காட்ட நினைத்திருக்கிறார்கள். 

இதனைக் கண்டித்து விரிவான அறிக்கையை நான் நேற்று மாலையே கொடுத்துள்ளேன்.

நான் மட்டுமல்ல, அகில இந்திய கட்சித் தலைவர்களும் பல்வேறு மாநில முதலமைச்சர்களும் இதனைக் கண்டித்துள்ளார்கள். 

ஏனென்றால் இதுமாதிரி பா.ஜ.க. இந்தியாவில் பல மாநிலங்களில் நடந்து வருவதை இந்தியாவின் அனைத்துத் தலைவர்களும் அறிவார்கள். 

அதுதான் இங்கும் நடக்கிறது.

விசாரணை என்ற பெயரால் நேரத்தை கடத்தி, செந்தில் பாலாஜியை மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் தொல்லைக்குள்ளாக்கி இருப்பதாக தெரிகிறது.

 நெஞ்சுவலி ஏற்படும் அளவுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறார்கள்.

நள்ளிரவு 2 மணி வரை இதைச் செய்து இறுதியாக மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். இப்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில்தான் இருக்கிறார்.

விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் சித்ரவதை செய்யும் நோக்கத்துடன் ஏன் செயல்பட வேண்டும்? 

இந்த வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வளவு மனிதநேயமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பது தேவையா?

அதிகாரிகளை ஏவியவர்களின் குரூர சிந்தனை இதன் மூலம் வெளிப்படுகிறது. என்ன வழக்கோ அதனை சட்டப்படி செந்தில் பாலாஜி சந்திப்பார்.

எங்களது அரசியல் நிலைப்பாடு எதுவோ அதில் நாங்கள் உறுதியாகத் தொடர்வோம். இந்த வழக்கை சட்ட ரீதியாக தி.மு.க. உறுதியுடன் எதிர்கொள்ளும். 

பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. இந்த அடக்குமுறைகளை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

                 --என்றுஅறிக்கைவெளியிட்டுள்ளார்.







.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?