அதி வெப்ப நிலை

 அதிவெப்ப வானிலை உலகம் முழுவதும் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. 

மழை பெய்தாலும் சரி, வெயில் அடித்தாலும் சரி இயல்பை விட அதிகமாக பதிவாவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. 

குறிப்பாக,இந்த தீவிர வானிலை ஏற்படுவதற்கு உலக வெப்பமயமாதல்  முக்கிய காரணமாக உள்ளது.

வளரும் நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் மட்டும் இன்றி, வளர்ந்த நாடுகளும் இதனால் பாதிப்படைந்துள்ளன.

 கோடை காலம் என்பதால், வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக, இந்த மாதம், வரலாற்றில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது.

 வெப்ப அலைகள் காரணமாக மக்கள் வெளியே செல்ல முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 சீனாவின் ஷாங்காய் நகரில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் வெப்பம் பதிவாகியிருப்பது தெரிய வந்துள்ளது.

 பிற்பகலுக்குப் பிறகு, மத்திய ஷாங்காயில் உள்ள மெட்ரோ நிலையத்தில் வெப்பநிலை 36.7 டிகிரி செல்சியஸாக உயர்ந்தது.

இதுகுறித்து நகரின் வானிலை மையம் வெளியிட்ட தகவலில், "மதியம் 1:09 மணிக்கு, சுஜியாஹுய் நிலையத்தில் வெப்பநிலை 36.1 டிகிரி செல்சியஸை (97 டிகிரி பாரன்ஹீட்) எட்டியது.

 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மே மாதத்தில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடைசியாக பதிவான அதிகபட்ச வெப்பநிலை 35.7 டிகிரி செல்சியஸ் ஆகும். 

கடந்த 1876, 1903, 1915, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்த வெப்பநிலை பதிவாகியிருந்தது.

உலக வெப்பமயமாதல், தீவிர வானிலையை மேலும் மோசமாக்கியுள்ளது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். 

.

காலநிலை மாற்றம் தொடர்பாக ஐநா குழு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "புவி வெப்பமடைதல், ஒரே நேரத்தில் பல்வேறு விதமான ஆபத்துகளை மேலும் தீவிரப்படுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை இல்ல வாயுக்களும், எல் நினோவும் இணைந்து வெப்பநிலையை அதிகரிக்கச் செய்வதால், 2023 முதல் 2027 வரையிலான ஐந்தாண்டு காலம் வெப்பமான காலகட்டமாக இருக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை  எச்சரித்திருந்தது.

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், "பருவநிலை மாற்றம் தொடர்பாக பாரிஸ் உடன்படிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட அடுத்த ஐந்தாண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு வருடத்திலாவது அதிக உலக வெப்பம் பதிவாகும் என்பதற்கு  வாய்ப்புள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதும் கடந்த 34 ஆண்டுகளில் நீர்நிலைகளில் நீர் ஆவியாதலின் விகிதம் 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 காலநிலை மாற்றம் காரணமாக புவி வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நீர்நிலைகளில் நீர் ஆவியாதல் அதிகரித்து வருகிறது.

இதனால் உலகில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்துள்ளது.

--------------------------------------------

ஆர்.யன்.ரவி ஆளுநரா?

பா.ஜ.க, தலைவரா??

உதகை ராஜ்பவனில் தமிழ்நாடு மாநில மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டுக்கு இணையான முதலீடுகளை ஹரியாணா மாநிலம் ஈர்த்து வருகிறது. நாம் கேட்பதாலோ, நேரில் சென்று தொழிலதிபர்களுடன் பேசுவதாலோ முதலீடுகள் வராது. 

முதலீடுகளை ஈர்க்கத் திறமையான மற்றும் பொருத்தமான மனித ஆற்றலை உருவாக்குவதே சிறந்த வழியாக இருக்கும். உலகலாவிய பெரும் தொழில் அமைப்புகளுக்கான சிறந்த சூழலை உருவாக்க வேண்டும்." என்று பேசியுள்ளார்.

தமிழக அரசின் நிர்வாகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலையிட முயல்வதாக அவ்வப்போது தி.மு.க. குற்றஞ்சாட்டி வருகிறது. 

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்கள் மீது ஆளுநர் ஆர்.என். ரவி எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பல மாதங்களாக கிடப்பில் போட்டுள்ளதாக தி.மு.க. தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

 இதனிடையே, 2024ஆம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சமீபத்தில் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு 9 நாட்கள் பயணமாக சென்று இருந்தார்.

அங்குள்ள முதலீட்டாளர்கள், வர்த்தக அமைப்பினர், அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

 இந்த நிலையில், தமிழக ஆளுநர் மறைமுகமாக விமர்சனம் செய்து இருப்பது அரசியல் வட்டாரத்தி்ல பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆளுநர் ரவியின் இத்தகைய கருத்துகளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மதிமுக பொதுச்செயலாளர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஆளுநர் ஆர்.என்.ரவி தமது வரம்புகளை மீறி செயல்படுகிறார்; அவர் தமது போக்கைக் கைவிட வேன்டும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், “முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்தை இழிவுபடுத்தி ஆளுநர் ஆர்.என்.ரவி விஷத்தைக் கக்கி இருக்கிறார். 

ஆளுநரின் பேச்சும் செயல்பாடுகளும் எல்லை மீறி போய் கொண்டு இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டின் முதல் விரோதியாக விளங்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை வெளியேற்ற வேண்டும். 

இல்லையேல் நாகலாந்து மாநிலத்தில் மக்கள் விரட்டி அடித்தது போல தமிழ்நாட்டிலும் நடக்கும்”என்று விமர்சித்துள்ளார்.


--------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?