இந்த மனிதனைப் பார்த்தீர்களா?

 மணிப்பூரில் மலை மாவட்டங்களில் வாழும் குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிகளுக்கும், தலைநகர் இம்பால் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் வசிக்கும் மைதேயி இனத்தவருக்குமிடையே கடந்த மே 3-ம் தேதி வன்முறை வெடித்தது. 

மைதேயி இனத்தவருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கக் கூடாது என்று வலியுறுத்தி குக்கி பழங்குடியினர் பேரணி நடத்தியபோது, வன்முறை ஆரம்பித்தது.

மணிப்பூரிலும், மத்தியிலும் பா.ஜ.க-வே ஆட்சியில் இருக்கிறது. ஆகவே, பிரதமர் மோடியின் கூற்றுப்படி, இது ‘டபுள் இன்ஜின் சர்க்கார்’ மணிப்பூரில் இருக்கிறது.

 ஆனால், `டபுள் இன்ஜின் சர்க்கார் இருந்தும் என்ன பயன்... ஒரு பயனும் இல்லையே' என்று குமுறுகிறார்கள் மணிப்பூர் மக்கள். ஏனென்றால், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட முடியாமல் டபுள் இன்ஜின் சர்க்கார் திணறிக்கொண்டிருக்கிறது.

கடந்த ஒன்றரை மாதங்களில், 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். சுமார் 60,000 பேர் வீடுகளை இழந்திருக்கிறார்கள். பல ஆயிரம் பேர் நாகாலாந்து, மிசோரம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். 

இப்படியான சூழலில், தினந்தோறும் அங்கு வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. 

பா.ஜ.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் ஆகியோரின் வீடுகள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன.

மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரான ராஜ்குமார் ரஞ்சன் சிங் கேரளாவில் பா.ஜ.க நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த நேரத்தில், மணிப்பூர் தலைநகர் இம்பாலிலுள்ள அவரின் வீடு தாக்கப்பட்டது. 

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்று ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் இல்லத்தைச் சூழ்ந்துகொண்டு பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

அந்தத் தாக்குதலில் உயிர்ப்பலி எதுவும் இல்லையென்றாலும், வீட்டின் இரண்டு தளங்களும், அங்கு நிறுத்தப்பட்டிருந்த மூன்று கார்களும் தீக்கிரையாகின. 

ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு தாக்கப்படுவது இது இரண்டாவது முறை. “நான் ஓர் இந்து. என் வீட்டைத் தாக்கியவர்களும் இந்துக்கள். ஆகவே, இது மதரீதியான பிரச்னை கிடையாது. அது ஒரு கும்பல்” என்று கூறியிருக்கிறார் ராஜ்குமார் ரஞ்சன் சிங்.

மைதேயி இனத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. 

இந்த நிலையில், தேர்தலையொட்டி, மைதேயி இனத்துக்குப் பழங்குடி அந்தஸ்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை பா.ஜ.க வழங்கியது. அதற்கு சாதகமான தீர்ப்பு ஒன்றை சமீபத்தில் மணிப்பூர் உயர் நீதிமன்றம் வழங்கியது. 

அதை எதிர்த்து குக்கி இனத்தவர் பேரணி நடத்தியபோதுதான், வன்முறை வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மைதேயி இனத்தவர் இந்துக்கள். குக்கி, நாகா உள்ளிட்ட பழங்குடிகள் அனைவரும் கிறிஸ்துவர்கள். மணிப்பூரில் வன்முறை வெடித்த பிறகு, ஏராளமான தேவாலயங்கள் தீவைத்து எரிக்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடரும் கலவரத்துக்கு மத்தியில், காவல் நிலையத்திலிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கொள்ளை போயிருக்கின்றன என்ற தகவலும் வெளியானது.

 கலவரம் நீடித்துவரும் நிலையில், தீவிரவாதக் குழுக்களின் கைகளிலும், பொதுமக்களின் கைகளிலும் ஆயுதங்களுக்கு இருந்தால் என்ன நடக்கும்... 


ஆங்காங்கே துப்பாகிச்சூடுகளும் நடக்கின்றன. போலீஸ் உடையில் சென்று பொதுமக்களைச் சுட்டுக் கொல்லும் சம்பவங்களும் மணிப்பூரில் நிகழ்கின்றன.

மணிப்பூரில் கடந்த மே 3-ம் தேதி வன்முறை ஆரம்பித்தபோது, கர்நாடகா தேர்தலில் பிரதமர் மோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மும்முரமாக இருந்தனர். 

மே 29-ம் தேதிதான் மணிப்பூருக்குச் சென்றார் அமித் ஷா. அங்கு, பலதரப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர், மாநிலத்தில் அமைதியைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பாக சில அறிவிப்புகளை வெளியிட்டார். 

அந்த அறிவிப்புகளில் எதுவும் பலன் தரவில்லை. இன்றுவரை மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை.

பல்லாயிரக்கணக்கான மக்கள் மணிப்பூரிலிருந்து அண்டை மாநிலங்களில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். மைதேயி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் மிசோரம் மாநிலத்தில் அடைக்கலமாகியிருக்கிறார்கள். 

அந்த மக்களைப் பாதுகாக்குமாறு மிசோரம் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்.

இவ்வளவுக்கும் மத்தியில், மணிப்பூர் பிரச்னை குறித்து ஒரு வார்த்தைகூட பிரதமர் மோடி பேசவில்லை. 

இது பற்றிய கோபமும் கொந்தளிப்பும் மணிப்பூர் மக்களிடம் காணப்படுகிறது. இந்த நிலையில்தான், `மோடியைக் காணவில்லை' என்கிற சுவரொட்டி, மணிப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சமூகஊடகங்களிலும் அந்தச் சுவரொட்டி வைரலாகியிருக்கிறது..

மணிப்பூர் விவகாரத்தில் உங்கள் மவுனத்தைக் கலையுங்கள்’ என்று 550 சமூக அமைப்புகளும், சமூகசெயற்பாட்டாளர்களும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். 

ஆனாலும் மோடி மவுனத்தைக் கலைக்கவில்லை. 

அந்தக் கோபத்தில்தான், பிரதமர் மோடியின் ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி தேவையில்லை என்று கோபத்துடன் கோஷமிட்டு, ரேடியோ பெட்டிகளை சாலையில் போட்டு உடைத்து போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் மணிப்பூர் மக்கள்.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?